டிராக்டர் உதிரிபாகங்கள் திருடிய கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது

ஊட்டி : நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே முத்தோரை பகுதியை சேர்ந்தவர் மலை காய்கறி விவசாயி சுரேஷ் (38). இவர் சொந்தமாக 6 டிராக்டர்கள் வைத்துள்ளார். சுரேஷ் தனது வீட்டின் அருகே டிராக்டர்கள் நிறுத்த இட வசதி இல்லாததால், முத்தோரை பாலாடா பஜார் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் டிராக்டர்களை நிறுத்தி செல்வது வழக்கம். கடந்த வாரம் இவருடைய டிராக்டரை முத்தோரை பாலாடா பஜாரில் நிறுத்தி விட்டு மறுநாள் வந்து பார்த்த போது டிராக்டர் முன்பகுதியில் இருந்த ஆங்கிள், ட்ரெய்லர் டோர், ஏணி உள்ளிட்ட உதிரி பாகங்கள் காணாமல் போயிருந்தது.

அதிர்ச்சியடைந்த சுரேஷ் ஊட்டி ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில், டிராக்டரில் உதிரி பாகங்கள் திருடியது ஊட்டி அருகே மேலூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (34), சூர்யா(20), பூர்ண சந்திரன் என்ற சுபாஷ் (21) என்பதும், இதேபோல் இவர்கள் முத்தோரை பகுதியை சேர்ந்த நாகராஜ், செந்தில், மாதேஷ் ஆகியோரின் டிராக்டர்களிலும் உதிரிபாகங்கள் திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் திருட்டு பொருட்களை வாங்கியதாக மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுந்தர் என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருட்டு பொருட்களை பறிமுதல் செய்தனர். இதில், சுபாஷ் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.!