4வது ரயில் பாதை திட்டத்திற்காக விரைவில் தண்டவாளம் அமைக்கும் பணி: கோட்டை, பூங்கா நகர் ரயில் நிலையங்களில் நடைமேடைகளை அற்றும் பணி 70% நிறைவு

சென்னை, அக்.17: எழும்பூர் – சென்னை கடற்கரை இடையே 4வது பாதை பணிக்காக கோட்டை மற்றும் பூங்கா நகர் ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடைகள், தண்டவாளம் மற்றும் நடைமேம்பாலத்தை அகற்றும் பணிகள் 70 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. விரைவில், புதிய தண்டவாளம் அமைக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் தற்போது, தாம்பரம் – எழும்பூர் இடையே 4 ரயில் பாதைகள் உள்ளன. ஆனால், எழும்பூர் – சென்னை கடற்கரை வரை 3 வழித்தடங்களே உள்ளன. இதில், 2 பாதையில் புறநகர் மின்சார ரயில்களும், ஒரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. குறிப்பிட்ட இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில் பாதை இல்லாததால், அதிக ரயில்கள் இயக்க முடியாத நிலை உள்ளது.

இதுதவிர, வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் பெரும்பாலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படுவதால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இங்கு கூட்டத்தை குறைக்கும் நோக்கில், தாம்பரத்தில் இருந்து எழும்பூர் ரயில் நிலையம் வழியாக வட மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்க புதிய பாதை அவசியமாகிறது. எனவே, சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4வது ரயில் பாதை அமைக்க வேண்டும், என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில், சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4.3 கி.மீ. தொலைவுக்கு 4வது புதிய ரயில் பாதை அமைக்க ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்தது.

மேலும், ₹300 கோடியில் திட்ட மதிப்பீடு செய்து, 4வது பாதைக்கு மண் பரிசோதனை முடிக்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. அதை தொடர்ந்து, இந்த 4வது பாதை அமைக்கும் பணிகள் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதற்காக, சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தட பறக்கும் ரயில் சேவையில், பூங்கா நகர் மற்றும் சென்னை கடற்கரை இடையே உள்ள பறக்கும் ரயில் நடைமேடைகள், தண்டவாளங்களை அகற்றப்பட வேண்டும் என்பதால், வேளச்சேரி – சென்னை கடற்கரை ரயில் சேவை, சிந்தாதிரிப்பேட்டை வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது, சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் கோட்டை, பூங்கா நகர் ஆகிய ரயில் நிலையங்களில் பறக்கும் வழித்தடத்தில் உள்ள தண்டவாளம் அகற்றப்பட்டுள்ளது. 2 ரயில் நிலையங்களிலும் நடைமேடையை இடிக்கும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துவிட்டது, கோட்டை ரயில்நிலையத்தில் 3, 4, 5வது நடைமேடைகள் மற்றும் நடைமேம்பாலம் அகற்றும் பணியும், பூங்கா நகர் நிலையத்தில் கட்டிடம் அகற்றும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. இதேபோல், கூவம் ஆற்றை ஒட்டி, பூமிக்கடியில் கம்பிகள் மூலமாக அடித்தளம் அமைக்கும் பணியும் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்தபிறகு, தண்டாவளம் அமைக்கும் பணிகள் அடுத்த சில மாதங்களில் தொடங்கும்,’’ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மார்ச் இறுதிக்குள் முடிக்க உத்தரவு
சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4வது ரயில் பாதை அமைக்கும் பணிக்காக, ₹280 கோடி ஒதுக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதற்காக, நடப்பு பட்ஜெட்டிலும் ₹96.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், இத்திட்டத்தை வரும் மார்ச் மாத இறுதிக்குள் விரைந்து முடிக்க ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்