3வது நாளாக போலீஸ் வேட்டை : 170 பேர் கைது: பைக்கில் ரோந்து சென்று சாராய ஊறலை அழித்த திருச்சி கலெக்டர், எஸ்பி

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் 55 பேர் பலியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க கடந்த 3 நாட்களாக போலீசார் அதிரடி சோதனை நடத்தி சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, 10,000 லிட்டர் சாராயம் மற்றும் சாராய ஊறல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், துறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பச்சமலை நேசக்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சாராயம் ஊறல் போட்டதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, கலெக்டர் பிரதீப்குமார், எஸ்பி வருண்குமார் ஆகியோர் தனித்தனி பைக்குகளில் நேற்றுமுன்தினம் இரவு பச்சமலை மலைப்பகுதிகளில் ரோந்து சென்றனர்.

தனிப்படை போலீசாரும் உடன் சென்றனர். அப்போது பச்சமலை நேசக்குளம் ரமேஷ்(36) என்பவரது தோட்டத்தில் பதுக்கிய 200 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 2லிட்டர் காய்ச்சிய சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. பின்னர் நேசக்குளம் கிராம பொதுமக்களை அழைத்து, கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோர் முன்னிலையில் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. புதுச்சேரியில் இருந்து சாராயம், மதுபானங்களை கடத்தி வருவதை தடுக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் கடந்த 3 நாட்களில் சாராயம், மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக 165 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 310 லிட்டர் சாராயம் மற்றும் 1638 மதுபாட்டிலை பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டத்தில் 3வது நாளாக நேற்று அதிகாலை முதல் எஸ்பி மணிவண்ணன் தலைமையில் 20 குழுக்கள் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். இதில் நேற்று மட்டும் 1000 லிட்டர் சாராய ஊறல் மற்றும் சாராயம் கைப்பற்றி அழிக்கப்பட்டது. இதேபோல், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ஏ விளாக்குளம் கிராமத்தில் சாராயம் காய்ச்சிய ஏ.விளாக்குளம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக்முருகன் (24), பஞ்சவர்ணம் (45), பத்ரகாளி (39), பாண்டி(58), வீரபத்திரன்(45) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

* குழந்தையை அணைத்தபடி போதையில் கிடந்த தந்தை
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் அந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கருணாபுரம் பகுதியில் வசித்து வந்த ராசாத்தி என்பவர் விஷ சாராயம் குடித்ததாக நேற்று முன்தினம் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருடன் சென்ற கணவர், மனைவியை மருத்துவமனையில் சேர்த்து விட்டு திரும்பியவர் அன்றைய தினம் இரவு மது வாங்கி குடித்துவிட்டு தனது குழந்தையை அணைத்தபடி கருணாபுரம் பகுதியில் போதையில் படுத்து கிடந்தார். விஷ சாராய துக்க வீட்டிற்கு வந்து சென்றவர்கள் மட்டுமின்றி, பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூற வந்தவர்களும் இதை பார்த்து முணுமுணுத்தபடி சென்றனர்.

* ரூ.8 கோடி போதை பொருள் மேலும் ஒரு பெண் கைது
தூத்துக்குடி இனிகோ நகரில் உள்ள ஒரு வீட்டில் நடந்த சோதனையில் உயர் ரக போதைப்பொருளான ஐஸ் என அழைக்கப்படும் கிறிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் 8 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதனை கடத்தி விற்பனை செய்து வந்த இனிகோ நகரை சேர்ந்த நிர்மல்ராஜ் (28), அவரது மனைவி ஷிபானி(28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதன் இந்திய மதிப்பு ரூ.8 கோடி என்றும், சர்வதேச மதிப்பு ரூ.24 கோடி என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இது இலங்கைக்கு கடத்த இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இவர்களுக்கு உதவியாக இருந்த ஷிபானியின் தங்கையான இனிகோ நகரை சேர்ந்த ப்ரீஸ்டா(25) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர் ஆட்டோவில் சென்று போதைப்பொருளை ஒருவருக்கு சப்ளை செய்தது அம்பலமானது. ஷிபானியின் தந்தை தாசனை தேடி வருகின்றனர்.

Related posts

தமிழக அரசின் ஐஏஎஸ் அதிகாரி மத்திய பணிக்கு மாற்றம்..!!

இந்துக்களிடம் பிரிவினையை தூண்டலாம் என பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார்: செல்வப்பெருந்தகை குற்றசாட்டு

அவைக் குறிப்பில் இருந்து பேச்சு நீக்கம்: சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்