மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம் கட்டிட தொழிலாளிக்கு சரமாரி கத்திக்குத்து: அம்பத்தூர் அருகே 3 பேர் கைது

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த மேனாம்பேடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (30). கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து கொரட்டூர் ரயில்வே நிலைய சுரங்கப்பாதை அருகில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது சுரங்கப்பாதை அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு போதையில் வந்த 3 பேர், பாண்டியனை வழிமறித்து மதுகுடிப்பதற்கு பணம் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், என்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த மூவரும் பாண்டியனை கத்தியால் சரமாரி குத்தியுள்ளனர். இதில் பாண்டியனின் வலது, இடது பக்கவிலா எலும்பு மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடியுள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரினடிப்படையில், கொரட்டூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, கொரட்டூர் சாவடி தெருவை சேர்ந்த வடிவேல் (43), அதே பகுதியை சேர்ந்த பரத் (21) மற்றும் அம்பத்தூர் காமராஜர் நகரை சேர்ந்த ஆரோக்கியராஜ் (28) ஆகியோர் கத்தியால் குத்தியது தெரியவந்தது. இதையடுத்து நேற்று இரவு 3 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர், 3 பேரையும் அம்பத்தூர் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு

கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு