இன்று முதல் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்; தமிழகம் முழுவதும் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: போராட்டம் வலுக்கிறது

சென்னை: நாடு முழுவதும் இன்று முதல் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் போராட்டம் வலுக்கத் தொடங்கியுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 150 ஆண்டு களுக்கு முன்பு இந்திய தண்டனைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த தண்டனைச் சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்டங்களை கொண்டுவர ஒன்றிய உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது. அதன்படி, இந்திய தண்டனைச் சட்டத்துக்கு (Indian Penal Code IPC- ஐபிசி) மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்குப் ( Criminal Procedure Code- CRPC சிஆர்பிசி) பதிலாக பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, இந்திய ஆதாரச் சட்டம், 1872-க்கு மாற்றாக (Indian Evidence Act, 1872- ஆதார சட்டம்) பாரதிய சாக்ஷய சட்டங்கள் இருக்கும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. இந்தச் சட்டத்தில், 484 பிரிவுகளைக் கொண்ட சிஆர்பிசிக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா இப்போது 531 பிரிவுகளைக் கொண்டிருக்கும். 177 பிரிவுகள் மாற்றப்பட்டுள்ளன, 9 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன, 14 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐபிசிக்கு மாற்றான பாரதிய நியாய சன்ஹிதாவில் முந்தைய 511 பிரிவுகளுக்கு பதிலாக இப்போது 358 பிரிவுகள் இருக்கும்.

அதில் 21 புதிய குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, 41 குற்றங்களில் சிறைத்தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது, 82 குற்றங்களில் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது, 25 குற்றங்களில் கட்டாய குறைந்தபட்ச தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, 6 குற்றங்களில் தண்டனையாக சமூக சேவை விதிகள் உள்ளன, 19 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த பாரதிய நியாய சன்ஹிதாவில் பலாத்காரம், கூட்டு பாலியல் பலாத்காரம், குழந்தைகளுக்கு எதிரான குற்றம், கொலை மற்றும் கடத்தல் போன்ற மனித மற்றும் உடல் தொடர்பான குற்றங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆதாரச் சட்டத்திற்கு மாற்றாக வரும் பாரதிய சாக்ஷயாவில் முந்தைய 167 பிரிவுகளுக்குப் பதிலாக இப்போது 170 பிரிவுகள் இருக்கும், 24 பிரிவுகள் திருத்தப்பட்டுள்ளன, 2 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன, 6 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த 3 குற்றவியல் சட்டங்களில் முக்கிய அம்சங்களாக, இனி காவல் நிலையத்துக்கு சென்றுதான் புகார் தர வேண்டும் என்பது இல்லை. மின்னணு தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாகவே புகார் தர முடியும். எந்த ஒரு காவல் நிலையத்திலும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யலாம். பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய கால அவகாசம் 90 நாட்கள். விசாரணையை முடிக்க வேண்டிய நாட்கள் 180. விசாரணை முடிவடைந்த 30 நாட்களில் தீர்ப்பு வழங்க வேண்டும்.

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு இந்தச் சட்டத்தை இன்று முதல் அமல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இந்தச் சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதேபோல பல்வேறு மாநில முதல்வர்கள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தியிருந்தனர். இந்தச் சட்டம் அமல்படுத்துவதை நிறுத்தி வைக்கக் கோரி தமிழகம் முழுவதும் வக்கீல்கள் இன்று முதல் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதில் மதுரை, நெல்லை, நாகர்கோவில், கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பல ஊர்களில் ஒரு வாரம் வரை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். சென்னையில் இன்று பிற்பகலில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். தமிழகத்தில் இந்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமாகியுள்ளதால் நீதிமன்ற வளாகங்களில் பரபரப்பு நிலவுகிறது. இதனால் வழக்குகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

 

Related posts

உத்தரப் பிரதேசத்தில் ஆன்மீக சொற்பொழிவு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரிப்பு!!

காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு

மின்னஞ்சல் மூலம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்: மிரட்டல் விடுத்த நபர் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை