கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் 11 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்: நீதிமன்றம் அனுமதி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் இன்று மீண்டும் மனு தாக்கல் செய்தனர். 3 நாள் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஷ சாராய வழக்கில் இதுவரை புதுச்சேரி மாதேஷ், சென்னை சிவக்குமார், சின்னதுரை, கோவிந்தராஜ், தாமோதரன், விஜயா, ஜோசப்ராஜா, ராமர், ஷாகுல் ஹமீது, பண்ருட்டி சக்திவேல், சூலாங்குறிச்சி கண்ணன், அய்யாசாமி, ஏமப்பேர் தெய்வீகன், செம்படாகுறிச்சி அரிமுத்து, சேஷசமுத்திரம் கதிரவன் உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான மாதேஷ், கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சின்னதுரை, ஜோசப்ராஜா, கதிரவன், கண்ணன், சக்திவேல், சிவகுமார், பன்சிலால், கவுதம் ஆகிய 11 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்தனர்.

இதற்காக கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 27ம்தேதி மனுதாக்கல் செய்தனர். இப்போது நீதிபதி ராம், மனுவை திருத்தம் செய்து ஜூலை 1ம்தேதி மீண்டும் மனுதாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி 11 பேரை மீண்டும் காவல் விசாரணைக்கு எடுப்பதற்காக சிபிசிஐடி போலீசார் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் மனுதாக்கல் செய்தனர். மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இதையடுத்து முக்கிய குற்றவாளி மாதேஸ், பிரபல சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் உள்ளிட்ட 11 பேரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். 5 நாட்கள் காவல் விசாரணைக்கு சிபிசிஐடி போலீசார் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி 3 நாள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார்.

 

Related posts

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை