3 குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெறும் வரை போராட்டம்: ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம்‌ சார்பில் பாரதிய நியாயா சன்ஹிதா, பாரதிய நாக்ரிக்சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷ்யா ஆதினியம் உள்ளிட்ட 3 புதிய சட்டங்களை ரத்து செய்ய கோரியும், இந்தி மொழியை திணிக்கும் முயற்சியை கைவிட கோரியும், நீதிமன்ற அதிகாரத்தை குறைத்து காவல்துறைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சர்வதிகார போக்கை கைவிட கோரியும் ஒன்றிய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டக்காரர்கள் ரயில் நிலையத்திற்குள் செல்லாதவாறு ரயில் நிலையத்திற்கு முன்தடுப்பு அமைத்து 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஜனநாயக வழக்கறிஞர் சங்க பொதுச்செயலாளர் சுரேஷ் கூறியதாவது: ஒன்றிய அரசின் மூன்று சட்ட திருத்தமானது ஜனநாயக படுகொலை ஆகும். தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு அந்தந்த மொழிகளில் பெயர் வையுங்கள், இந்தியில் பெயர் வைக்காதீர்கள், மறைமுகமாக இந்தியை திணிக்கிறார்கள். அரசியலமைப்பை மாற்ற நினைக்கிறார்கள். அதனுடைய ஒரு பகுதி தான் இந்த திட்டம். இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கும் மூன்று முக்கிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறும் வரை வழக்கறிஞர்களின் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார். மேலும், தடுப்பை தாண்டி ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றதால் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை கைது செய்தனர்.

Related posts

பயந்து ஒதுங்கியது அதிமுக ஜெயலலிதா படத்தை பாமக பயன்படுத்த உரிமையுள்ளது: டிடிவி பேச்சு

செல்போனை கடலில் வீசிய தகராறில் மீனவரை செங்கலால் தாக்கி உயிருடன் புதைத்த கும்பல்: சிறுவன் கைது 4 பேருக்கு வலை

இங்கிலாந்து பொது தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு: ஆட்சியை தக்கவைப்பாரா ரிஷி சுனக்? இன்று காலை முடிவு தெரியும்