திடீர் மழையால் கயத்தாறில் 3 டன் மக்காச்சோளம் சேதம்: விவசாயிகள் கவலை

நெல்லை: திடீர் மழைப்பொழிவால் கயத்தாறு சுற்று வட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட சுமார் 3 டன் மக்காச்சோளம் சேதமடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். கயத்தாறு, கோவில்பட்டி, கழுகுமலை, கடம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். கயத்தாறு சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. ஜனவரி, பிப்ரவரி மாதம் அறுவடைக்காலம் என்பதால் கடந்த 10 நாட்களாக விவசாயிகள் மக்காச்சோளத்தை அறுவடை செய்து வருகின்றனர். இதுவரை சுமார் 250 ஏக்கரில் விவசாயிகள் மக்காச்சோளத்தை அறுவடை செய்தனர். அறுவடை இயந்திரம் மூலம் மணிக்கு ரூ.2 ஆயிரமும், ஒரு நபருக்கு கூலியாக ரூ.350 முதல் ரூ.500 வரை செலவு செய்து விவசாயிகள் மக்காச்சோளத்தை அறுவடை செய்தனர்.

அறுவடை செய்யப்பட்ட மக்கச்சோளங்களை உலர வைத்து, மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி மொத்த வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து ஒரு குவிண்டால் மக்காச்சோளத்தை ரூ.2100க்கு வாங்கிச் செல்கின்றனர். வரத்து அதிகரிப்பால் கடந்த 2 நாட்களை விட மக்காச்சோள கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.200 வீழ்ச்சியடைந்தது. இந்நிலையில் நேற்று கயத்தாறு சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இதனால் கயத்தாறு, பன்னீர்குளம், கரிசல்குளம், கூட்டுப்பண்ணை, சத்திரப்பட்டி, தலையால்நடந்தான்குளம், அகிலாண்டபுரம், ஆத்திகுளம், அரசன்குளம், காப்பிலிங்கம்பட்டி ஆகிய பகுதிகளில் மழையால் அறுவடை செய்த மக்காச்சோளம் பயிர்கள் சேதமடைந்தது. கயத்தாறு – கடம்பூர் சாலையில் கூட்டுப்பண்ணை ரன்வேயில் உலர வைக்கப்பட்டு இருந்த மக்காச்சோளம் மழை நீரில் நனைந்து சேதமடைந்தது. தொடர்ந்து பெய்த மழைநீரில் இருந்து மக்காச்சோளங்களை உடனடியாக அப்புறப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறினர். இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன் அறுவடை செய்யப்பட்டு, விற்பனைக்கு தயாராக இருந்த 3 டன் முதல் 4 டன் வரை மக்காச்சோளம் மழையில் நனைந்து சேதமானதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கயத்தாறு பகுதி விவசாயிகள் கூறுகையில் ‘‘கயத்தாறு, பன்னீர்குளம் சுற்று வட்டார பகுதிகளை பொருத்தவரை காலப்பயிராக மக்காச்சோளம் அதிகமாகப் பயிரிடப்படும். அதற்கு அடுத்தப்படியாக உளுந்து பயிரிடப்படும். அறுவடை நேரத்தில் மழை எதிர்பாராத விதமாக பெய்ததால் கயத்தாறு பகுதி விவசாயிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வெள்ள பாதிப்புகளில் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்காத நிலையில், இந்த திடீர் மழை எங்களது பயிர்களை பாதித்து விட்டது. கயத்தாறை பொருத்தவரை ஒரு விவசாயி மக்காச்சோளத்தை பயிரிட்டு 30 முதல் 70 குவிண்டால் வரை அறுவடை செய்வார். அந்த வகையில் ஒரு விவசாயிக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1.40 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கி கயத்தாறு பகுதி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்’’ என்றனர்.

* ஒரு விவசாயிக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1.40 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

விஷச் சாராய வழக்கு: 9 பேரிடம் விசாரணை

நீட் முறைகேடு – நாடாளுமன்றம் முன் இன்று போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு