திரு.வி.க நகர் தொகுதி 74வது வார்டில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 341 மனுக்கள் பெறப்பட்டன: 15 நாளில் தீர்வு காண நடவடிக்கை

பெரம்பூர்: திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட 74வது வார்டில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 341 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் பல வகையான சேவைகளை ஒரே இடத்தில் பெறவும், அவர்களின் மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவும், வெவ்வேறு துறை சார்ந்த பிரச்னைகளுக்கு ஒரே இடத்தில் தீர்வு காணும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சியில், மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு நேற்று முன்தினம் சென்னையில் 3 இடங்களில் சோதனை அடிப்படையில் அந்த திட்டத்திற்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் 10 துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அதன் ஊழியர்கள் கலந்து கொண்டனர். முகாமில் பெறப்படும் மனுக்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு 15 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். அந்த வகையில் திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 74வது வார்டில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று முன்தினம் ஓட்டேரி ஸ்டாரன்ஸ் ரோடு பகுதியில் உள்ள திருவிக நகர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. மத்திய வட்டார துணை ஆணையர் பிரவீன் குமார் தலைமை வகித்தார். மண்டல அதிகாரி முருகன், செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் சரஸ்வதி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் மின்சார வாரியம் சார்பில் புதிய மின் இணைப்பு, மின் கட்டணம் மாற்றங்கள், மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டன.

இதேபோல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பட்டா மாற்றுதல், நில அளவீடு, வாரிசு சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட சேவைகளும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஊரக வளர்ச்சி துறை சார்பில் கட்டுமான வரைபட ஒப்புதல் வழங்குதல், சொத்து வரி, குடிநீர் வரி, பெயர் மாற்றங்கள், குடிநீர் இணைப்பு, பிறப்பு இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்பட்டன. மேலும் காவல்துறை சார்பில் பொருளாதார குற்றங்கள் தொடர்பான புகார்கள், நில அபகரிப்பு, வரதட்சணை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் உண்டான புகார்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனங்கள் பெறுவது தொடர்பாகவும், சுயதொழில், வங்கி கடன் உதவி, கல்வி உதவித்தொகை, தொழிற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு உதவிகள் சம்பந்தமான மனுக்கள் பெறப்பட்டன. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் கட்டுமான வரைபட ஒப்புதல் வழங்குதல், வீட்டு வசதி வாரியம் சார்பில் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளுக்கு விற்பனை பத்திரம் வழங்குதல், நில உபயோக மாற்றத்திற்கான தடையில்லா சான்று வழங்குதல் உள்ளிட்ட சான்றிதழ் வழங்கப்பட்டன. இதேபோன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதுமைப்பெண் கல்வி உதவி திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கன திட்டங்கள் சம்பந்தமாக பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன.

இவ்வாறு ஒரே இடத்தில் பல துறை சார்ந்த அதிகாரிகள் சேவைகளை வழங்கியதால் பொதுமக்கள் அதிகளவில் அங்கு குவிந்தனர். இதில் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சிதுறை சார்பில் 141 மனுக்களும், வேலை வாய்ப்பு சம்பந்தமாக 47 மனுக்களும், சென்னை மாநகராட்சிக்கு 89 மனுக்களும், இதர துறை சார்பில் பல்வேறு மனுக்கள் என மொத்தம் 341 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் கூறினர். மேலும், ஒரே இடத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை நேரில் சந்தித்து தங்களது குறைகளை தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்வது பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும், சோதனையின் அடிப்படையில் தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் ஒவ்வொரு வார்டு வாரியாக விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் 3 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனை திட்டத்தில் குறிப்பிட்ட 74வது வார்டு என்பது சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் சொந்த வார்டு ஆகும். எனவே முகாம் நடைபெறும் இடத்தினை மேயர் பிரியா ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜக்டே உள்ளிட்ட அதிகாரிகளும் முகாம் நடைபெறும் இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

 

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்