பிரதமர் மோடி வருகையையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 3400 போலீசார் பாதுகாப்பு!

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்திற்கு நாளை பிரதமர் மோடி வர உள்ளதால் ஒரு கூடுதல் காவல் துறை இயக்குனர் மேற்பார்வையில் 3400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிருப்பது; ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி 20-1-2024 மற்றும் 21-1 – 2024 என இரண்டு நாள் சுற்றுப்பயணம் வருகிறார். பிரதமர் தங்கும் இடத்தில் ஒரு எஸ்.பி தலைமையில் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் என மூன்றடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.

இதனை போன்று ராமநாதசுவாமி கோயிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அக்னி தீர்த்தம் கடல், தனுஷ்கோடி மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகள், பாம்பன் பாலம் போன்ற கடற்கரை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் பொருட்டு கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ராமேஸ்வரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட் உள்ள பொது இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனை போன்று இலங்கைத் தமிழர் மறு வாழ்வு மையத்தில் தங்கியுள்ளவர்கள் விபரங்கள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ராமேஸ்வரம் மற்றும் தீவு பகுதி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை போன்று ட்ரோன் போன்றவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு நிலையிலும் வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயல் இழக்க செய்யும் நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு மோப்ப நாய் ஆகிய படையினர் மூலம் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் ஒரு கூடுதல் காவல் துறை இயக்குனர் மேற்பார்வையில் 3 காவல்துறை துணைத் தலைவர்கள், 14 காவல் கண்காணிப்பாளர்கள், 13 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 25 உதவி /துணை காவல் கண்காணிப்பாளர் என 3,400 காவல்துறையினர் மற்றும் 14 வெடிகுண்டு நிபுணர்கள் என விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

கும்மிடிப்பூண்டியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

ஜூலை 07: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34

இங்கிலாந்தில் இந்தியா