பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ரூ.5 லட்சத்தில் 32 நவீன கேமிரா

*தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தகவல்

ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரூ.5 லட்சம் செலவில் 32 நவீன கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.நீலகிரி மாவட்டம், ஊட்டி நகரம் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் குளிர்ந்த காலநிலையை அனுபவிக்க ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

அவ்வாறு வர கூடிய சுற்றுலா பயணிகள் இங்குள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்டு மகிழ்கின்றனர். குறிப்பாக ஊட்டியில் உள்ள நூற்றாண்டு புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவை பார்வையிடாமல் செல்வதில்லை. மேலும் தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் நூற்றாண்டுகளை கடந்து நடத்தப்படும் மலர் கண்காட்சி உலக பிரசித்தி பெற்றதாகும். 5 நாட்கள் நடக்கும் இக்கண்காட்சியை காண மட்டும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிவார்கள். மலர் கண்காட்சிக்கு வருபவர்களை கவரும் வண்ணம் லட்சக்கணக்கான கார்னேசன் மலர்களை கொண்டு பல்வேறு வகையான அலங்காரங்கள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான கோடை சீசனுக்காக தாவரவியல் பூங்கா முழு வீச்சில் தயாராகி வருகிறது.

இதனிடையே ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ராஜ்பவன் மாளிகை பாதுகாப்பு கருதி பூங்கா வளாகத்தில் ரூ.5 லட்சம் செலவில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகளை பூங்கா நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன்படி பூங்கா நுழைவுவாயில் பகுதி, பெரணி இல்லம், கண்ணாடி மாளிகை, பிரதான புல் தரை மைதானம், இத்தாலியன் கார்டன், தோட்டக்கலை அலுவலகம், ராஜ்பவன் சாலை, டாப் கார்டன் உள்ளிட்ட பல இடங்களில் மொத்தம் 32 நவீன கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு பூங்கா உதவி இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி மானிட்டரில் பார்த்து கொள்ள முடியும். இதன் மூலம் பூங்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். மேலும் இதன் மூலம் திருட்டு சம்பவங்களை தவிர்ப்பதுடன், சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதையும் தடுக்க முடியும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து இதுகுறித்து பூங்கா உதவி இயக்குநர் பாலசங்கர் கூறுகையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பூங்காவில் 32 சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

Related posts

தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் விக்கிரவாண்டியில் அனல் பறக்கும் பிரசாரம்!

அமெரிக்க அதிபர் தேர்தல்; கமலா ஹாரிசுக்கு பெருகும் ஆதரவு

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!