30 ஆண்டுகளாக தனியார் வசம் இருந்த பொழிச்சலூர் அகத்தீஸ்வரர் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்தது: நீதிமன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை

பல்லாவரம்: பொழிச்சலூரில் 30 ஆண்டுகளாக தனியார் வசம் இருந்த அகத்தீஸ்வரர் கோயில், நீதிமன்ற உத்தரவின் பேரில், அறநிலைத்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டு காலம் பழமையான இந்த கோயில் தொண்டை மண்டல சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. அகத்திய முனிவருக்கு இந்த கோயிலில் சுயம்புவாக சிவபெருமான் காட்சி அளித்ததால் அவரது பெயரால் இந்த கோயில் அகத்தீஸ்வரர் என்று அழைக்கப்படுவதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

சனி பரிகார தலமான திருநள்ளாறுக்கு இணையாக இக்கோயில் உள்ளதால், பக்தர்களால் ‘வட திருநள்ளாறு’ என்று அழைக்கப்படுகிறது. கிரகங்களில் சனி பாதிப்பிற்குள்ளான ஜாதகதாரர்கள் இக்கோயிலுக்கு வந்து அகத்தீஸ்வரரை வணங்கினால் சனியின் தாக்கம் குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால், இந்த கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் சனிப் பெயர்ச்சி அன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

இவ்வளவு பிரசித்தி பெற்ற கோயிலை கடந்த 30 ஆண்டுகளாக தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து, தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து, கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை எல்லாம் தனக்கு வேண்டியவர்களுக்கு குத்தகைக்கு விட்டு பணம் சம்பாதித்து வந்தார். எனவே, இந்த கோயிலை அறநிலையத்துறை மீட்டு, பராமரிக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நீண்ட நாட்களாக அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தனியார் வசம் இருக்கும் இக்கோயிலை உடனடியாக மீட்டு இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது.

அதன்பேரில், நேற்று மாலை அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், காஞ்சிபுரம் மாவட்ட இணை ஆணையர் வான்மதி ஆகியோரின் உத்தரவின் படி, அரசு வழக்கறிஞர் ஆலோசனையின் பேரில், செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் லெட்சுமிகாந்தன் பாரதிதாசன் முன்னிலையில், செயல் அலுவலர், ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள், பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவர், பொதுமக்களின் ஒத்துழைப்போடு முதல்கட்டமாக கோயிலுக்குச் சென்று, தனியார் வசம் இருந்த கோயிலை, தங்களது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து கோயில் உண்டியலை தனிநபர்கள் யாரும் திறக்க முடியாத வகையில் மூடி முத்திரையிட்டு சீல் வைத்தனர். மேலும், கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்ததை பக்தர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் கோயில் வளாகத்தில் அது குறித்த வாசகம் அடங்கிய பதாகைகளும் வைக்கப்பட்டது.

* பக்தர்கள் வரவேற்பு
பல ஆண்டுகாலமாக புராதான கோயிலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து, கோயில் சொத்துகளை தனியார் ஆண்டு அனுபவித்து வந்த நிலையில், தற்போது அவை நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கப்பட்ட தன் மூலம், இனி வரும் காலங்களில் கோயில் சொத்துகள் தனிநபர்களால் கொள்ளை போவது தடுக்கப்பட்டு, பாதுகாக்கப்படும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கூறியதுடன், அரசின் இந்த செயலுக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

* தக்கார் நியமனம்
திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் கோயிலுக்கு தக்காராக நியமனம் செய்யப்பட்டதாக நீதிமன்ற உத்தரவு எண்ணுடன் துண்டுச் சீட்டும் கோயில் வளாகத்தில் ஒட்டப்பட்டது. அறநிலையத்துறை அதிகாரிகள் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சிவனடியார்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு