பைப்லைன் பள்ளம் தோண்டும்போது சிக்கியது 3 ஆயிரம் ஆண்டு பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு: திருப்பத்தூர் அருகே பரபரப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த கந்திலி அருகே பைப்லைனுக்கு பள்ளம் தோண்டும்போது 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் பயன்படுத்திய பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் அடுத்த கந்திலி தொப்பலகவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன், விவசாயி. இவர் நேற்று காலை தனது விவசாய நிலத்திற்கு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பைப்லைன் அமைக்க பள்ளம் தோண்டினார். அப்போது சிறிய அளவிலான கொப்பரைகள் மற்றும் மண் சுவடுகள், மண் பாத்திரங்கள், கருப்பு சிவப்பு மண்பாண்டங்கள் மற்றும் ஈமப்பேழை போன்ற பொருட்கள் உள்ளிட்டவைகள் கிடைத்தன.

இதையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் பிரபுவிடம் தெரிவித்தார். அவர் திருப்பத்தூர் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தாசில்தார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். தகவலறிந்த திருப்பத்தூர் தனியார் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் மற்றும் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருபவரான ஆ.பிரபுவும் சம்பவ இடம் வந்து பார்த்து ஆய்வு செய்தார். இதுகுறித்து பிரபு கூறியதாவது: இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் பெருங்கற்காலத்தை சேர்ந்தவையாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதாவது பெருங்கற்காலத்தை சேர்ந்த அக்கால மக்கள் தங்களுக்குள் மிக முக்கியமானவர்கள் இறக்கும் தருவாயில் அவர்களை நிலத்திற்கு அடியில் அடக்கம் செய்யும்போது அவர்கள் பயன்படுத்திய புழங்கு பொருட்களையும் உடன் வைத்து அடக்கம் செய்யும் மரபு இருந்துள்ளது. அந்த வகையில் இந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கருப்பு, சிவப்பு மண்பாண்டங்கள் மற்றும் ஈம ேபழை உடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இவை திருப்பத்தூர் மாவட்டத்தின் முற்கால வரலாற்றினை எடுத்துரைப்பதாக இருக்கிறது. தமிழக அரசின் தொல்லியல் துறையும் இந்த இடத்தில் முறையான அகழாய்வினை மேற்கொள்ளும்போது மேலும், பல அரிய உண்மைகள் வெளி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Related posts

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!