மாநகராட்சி மேயர்களுக்கு ரூ.30,000 மதிப்பூதியம் வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மாநகராட்சி மேயர்களுக்கு ரூ.30,000 மதிப்பூதியம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள், துணைத்தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள், தாங்கள் முழுநேர மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளதால், தங்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என 13.04.2022 அன்று முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

முதலமைச்சர், இக்கோரிக்கையினை பரிசீலித்து, மாநகராட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், துணை மேயர், நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்களின் மக்கள் நலப் பணிகளை சிறப்பிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாநகராட்சி மேயர்களுக்கு, மாதந்தோறும், ரூபாய் முப்பதாயிரம், துணை மேயர்களுக்கு ரூபாய் பதினைந்தாயிரம் மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் மதிப்பூதியம் வழங்கப்படும்.

இதே போன்று, நகராட்சி மன்றத் தலைவர்களுக்கு ரூபாய் பதினைந்தாயிரம், துணைத் தலைவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் மதிப்பூதியம் வழங்கப்படும். மேலும், பேரூராட்சித் தலைவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம், பேரூராட்சி துணைத் தலைவர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு மதிப்பூதியம் வழங்கப்படும். இந்த மதிப்பூதியம், இம்மாதம், அதாவது, 2023ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வழங்கப்படும்.

இந்நடவடிக்கை, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் நிருவாகத் திறனை வலுப்படுத்துவதற்கு அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

தென்காசியில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்

இளைஞர் தீக்குளிப்பு – 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்