300 கேமராக்கள் ஆய்வு செய்து சிறுமி மீட்பு குழந்தைகளை கடத்தி பீகாரில் விற்பனை செய்த வாலிபர் கைது

*ஐதராபாத் போலீசார் தீவிர விசாரணை

திருமலை : ஐதராபாத்தில் கடத்தப்பட்ட சிறுமியை 300 கேமராக்களை ஆய்வு செய்து மீட்ட போலீசார், வாலிபரை கைது செய்தனர். அவர் பல குழந்தைகளை கடத்தி பீகாரில் விற்பனை செய்தது விசாரணையில் தெரிவந்துள்ளது.தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள பேகம் பஜார் சத்ரி பகுதியைச் சேர்ந்தவர் பிரியங்கா(26). இவரது 4 வயது மகனும், அண்ணன் மகளான 6 வயது சிறுமியும் விடுமுறை நாட்களில் கட்டேலமண்டியில் வசிக்கும் தனது பாட்டி வீட்டுக்கு செல்வது வழக்கம்.

அதன்படி பிரியங்கா நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால் இருவரையும் அவரது தாய் வீட்டிற்கு அழைத்துச்சென்றார். இருவரும் வீட்டின் வெளியே தெருவில் விளையாடிக்கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து சிறுவன் மட்டும் வீட்டிற்கு வந்தார். சிறுமி எங்கே என்று கேட்டால் தெரியவில்லை என கூறியதால் அத்தை பிரியங்கா அதிர்ச்சியடைந்து சுற்றுவட்டார பகுதிகளில் தேடிப்பார்த்தார். நீண்ட நேரமாகியும் சிறுமி கிடைக்கவில்லை.

இதுகுறித்து அபிட்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை மர்ம நபர் ஒருவர் ஆட்டோவில் ஏற்றிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து 5 தனிப்படை அமைத்த அபிட்ஸ் போலீசார் 300க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில், ஆட்டோவில் குழந்தையை கடத்தி சென்ற நபர் அப்சல்கஞ்ச் என்ற இடத்தில் இறங்கினார். அங்கிருந்து சிறுமியை அழைத்துக்கொண்டு ஷம்ஷாபாத்- கொத்தூர் பஸ்சில் ஏறி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையில் கொத்தூர் காவல் நிலையம் அருகே போலீசார் வாலிபரை நேற்று சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து வாலிபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிலால் என்பதும், இவர் பல்வேறு பகுதியில் இருந்து குழந்தைகளை கடத்தி பீகாருக்கு அழைத்து சென்று விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவர் மீது குழந்தை கடத்தல் தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இதுவரை எத்தனை குழந்தைகளை கடத்தியுள்ளார்? யாரிடம் குழந்தை விற்பனை செய்துள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 16 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,500 வழங்கப்படும் : காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை

சந்தேகத்திற்கிடமாக இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக இலங்கை மீனவர்கள் 3பேர் கைது