திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 30 மணி நேரம் காத்திருப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் தொடர் விடுமுறையின் காரணமாக திருப்பதி வந்தபடி உள்ளனர். ஏற்கனவே பல்வேறு கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர திருப்பதியில் சீனிவாசம் காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ் என 3 இடங்களில் இலவச டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டோக்கன்களை பெறுவதற்காக நேற்று முன்தினம் இரவு முதலே பக்தர்கள் தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேற்று காலை 6 மணி முதல் இலவச டோக்கன்கள் வழங்கப்பட்டது. எந்தவித டிக்கெட்டுகளும் இல்லாமல் நேரடியாக வைகுண்டம் காம்ப்ளக்ஸ் வழியாக காத்திருந்து சுவாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் கூட்டமும் அதிகளவில் இருந்தது. இதனால் வைகுண்டம் காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகளும் நிரம்பியது. தொடர்ந்து சுமார் 3 கிலோ மீட்டருக்கு மேல் சிலா தோரணம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் எந்தவித டிக்கெட்களும் இல்லாமல் நேரடியாக திருமலைக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு தரிசனம் செய்ய 30 மணி நேரம் ஆகிறது.

இந்நிலையில், நேற்று காலை முதல் மாலை 5 மணி நிலவரப்படி 50 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு ஒத்துழைப்பு அளித்து தங்களுக்கான நேரம் வரும்வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். கூட்டம் அதிகமாக இருப்பதால் ரூ.300, உள்ளிட்ட தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் வர வேண்டும். எந்தவித டிக்கெட்களும் இல்லாத பக்தர்கள் 30 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டும் என்பதால் இதனை கருத்தில் கொண்டு தங்கள் பயணத் திட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு