30 சதவீதத்திற்கு மேல் விற்பனையாகும் டாஸ்மாக் கடைகள் கண்காணிப்பு: அதிகாரி தகவல்

சென்னை,: தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. தற்போது ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், மாவட்டம்தோறும் 30 சதவீதத்திற்கும் மேல் விற்பனை நடைபெறும் டாஸ்மாக் கடைகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: டாஸ்மாக் கடைகள் கூடுதல் நேரம் செயல்படாமல் தடுக்க மாவட்டம்தோறும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.உத்தரவை மீறி கூடுதல் நேரம் செயல்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், 30 சதவீதத்திற்கும் மேல் விற்பனை நடைபெறும் கடைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மதுரை, சேலம், திருச்சி மண்டலங்களில் விற்பனை அதிகமாக நடப்பதாக தெரிகிறது. அதிகபட்சம் ரூ.1 லட்சம் விற்பனையாகும் கடையில் ரூ.1.30 லட்சம் வரையில் மட்டுமே விற்பனை நடைபெறலாம். விற்பனை அதிகம் நடைபெற்றால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட கடை பணியாளர்களிடம் விளக்கம் கேட்கப்படும். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கூலிங் பீர் விற்பனை அதிகமாக நடக்கிறது. இதனாலேயும் விற்பனை அதிகரிப்பதாக ஊழியர்கள் கூறுகின்றனர். சரியான காரணங்கள் இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இல்லை என்றால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட மேலாளர் தலைமையிலான அதிகாரிகள் இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்யக்கூடாது. விற்பனை செய்யும் மதுபானங்களுக்கு கண்டிப்பாக ரசீது வழங்க வேண்டும். வேட்பாளர்கள் வழங்கும் டோக்கன்களை வைத்து விற்பனை நடைபெறுகிறதா என்பதையும் கண்காணித்து வருகிறோம். இவ்வாறு கூறினார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை