30 ஆண்டுகளாக சிகிச்சை அளித்த போலி டாக்டர் சிக்கினார் வந்தவாசி அருகே பரபரப்பு டிப்ளமோ மட்டுமே படித்துவிட்டு

வந்தவாசி, பிப்.13: வந்தவாசி அருகே டிப்ளமோ படித்து விட்டு 30 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் நேற்று கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில் ஒருவர் டிப்ளமோ மட்டுமே படித்து விட்டு நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, இணை இயக்குனர் பாபுஜி உத்தரவின் பேரில், வந்தவாசி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சிவப்பிரியா லோகேஸ்வரன் தலைமையில் பொன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று பொன்னூர் கிராமத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட கிளினிக்கில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போலி டாக்டர் அர்ஜூனன்(61) என்பவரை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர், அங்கு நோயாளிகளுக்கு பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசிகள், சிரஞ்சுகள், குளுக்கோஸ் ஏற்றுவதற்கான தளவாட பொருட்கள், மருந்து, மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், டிப்ளமோ மட்டுமே படித்துள்ள அர்ஜூனன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருவது தெரியவந்தது. மேலும், பொன்னூர் ஆச்சாரி தெருவில் வசிக்கும் இவருக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் மூத்த மகன் அரசு மருத்துவர் என்பதும், அவரது மருமகளும் மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் வந்தவாசி பஜார் வீதியில் கிளீனிக் நடத்தி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலி டாக்டர் அர்ஜூனனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை