ராணிப்பேட்டை அருகே பயங்கரம் பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் பள்ளி மாணவன் உட்பட 3 பேர் பலி

*கல்லூரி மாணவி, தொழிலாளி படுகாயம்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை அருகே பைக்குகள் நேருக்குநேர் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உட்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், கல்லூரி மாணவி மற்றும் தொழிலாளி படுகாயம் அடைந்தனர்.ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மகன் அருண்குமார்(16), அம்மூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். மகள் வைஷ்ணவி(21), காட்பாடி அடுத்த சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் எம்ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை அருண்குமார் தனது அக்கா வைஷ்ணவியை பல்கலைக்கழகத்திற்கு பைக்கில் அழைத்து சென்றார். தொடர்ந்து, வாணாபாடி- செட்டித்தாங்கல் சாலையில் தனியார் பேப்ரிகேஷன் கம்பெனி அருகே சென்று கொண்டிருந்தனர்.அப்போது, எதிரே ஒரே பைக்கில் சோளிங்கர் பகுதிக்கு கட்டிட வேலைக்கு சென்று கொண்டிருந்த லாலாபேட்டை சரத்பாபு(28), கோபால்(45), பெல் ஆன்சிலரி மலைமேடு ஆனந்த்(25) ஆகியோர் மீது இவர்களது பைக் நேருக்குநேர் மோதியது.

இதில், 5 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டதில், படுகாயம் அடைந்த தொழிலாளிகள் சரத்பாபு, கோபால் மற்றும் பள்ளி மாணவன் அருண்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். கல்லூரி மாணவி வைஷ்ணவி மற்றும் தொழிலாளி ஆனந்த் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி பிரபு, ஏடிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா, இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வைஷ்ணவி, ஆனந்த் இருவரையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வைஷ்ணவி மேல் சிகிச்சைக்காக பூட்டுத்தாக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரு
கிறது.

மேலும், போலீசார் விபத்தில் பலியான பள்ளி மாணவன் அருண்குமார் உட்பட 3 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பைக்குகள் நேருக்குநேர் மோதி கொண்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

சதுரகிரி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்