3 வாலிபர்கள் வீட்டுக்கு வந்து மிரட்டுகிறார்கள் ஆசைக்கு இணங்கும்படி பெண்ணுக்கு டார்ச்சர்

*பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் குழந்தைகளுடன் தஞ்சம்

காடையாம்பட்டி : காடையாம்பட்டி அருகே, ஆசைக்கு இணங்கும்படி மிரட்டி, பாலியல் தொந்தரவு கொடுத்து, தாக்குதல் நடத்திய 3 வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கணவர் மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் இளம்பெண் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியம், கே.மோரூர் கிராமத்தில் பழனிசாமி (46), சுமதி(32) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் சொந்த ஊரான தலைவாசலில் இருந்து, கே.மோரூர் பகுதிக்கு வந்து கடந்த 5 ஆண்டுகளாக பிழைப்பு நடத்தி வருகின்றனர். இங்கு விவசாய தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். பழனிசாமி லாரி டிரைவராக உள்ளார். இந்நிலையில், பக்கத்து தெருவை சேர்ந்த 3 வாலிபர்கள் தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக சுமதி தீவட்டிப்பட்டி போலீசில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு புகாரளித்தார்.

ஆனால், புகாரின் மீது போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில், நேற்று கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். அவரது புகாரை போலீசார் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக அக்கிராமத்தை சேர்ந்த மக்கள், சுமதிக்கு ஆதரவாக ஸ்டேஷனுக்கு வந்தனர்.

சுமதி கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியை சேர்ந்த 3 வாலிபர்கள், ஆசைக்கு இணங்க வேண்டும் எனக்கூறி என்னை மிரட்டி வருகின்றனர். இல்லாவிட்டால் இரவு நேரங்களில் ஆட்களை வைத்து கதவை தட்டுவோம், உள்ளே புகுந்து உன்னை அடித்து துன்புறுத்துவோம், பாலியல் தொல்லை கொடுப்போம் என்று மிரட்டுகின்றனர். இதை தட்டிக்கேட்ட எனது கணவரின் தாடியை பிய்த்து, அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும், ஊருக்குள் உங்களை விட மாட்டோம், ஊரை விட்டே காலி செய்து விடுவோம்.

அதனால், நாங்கள் எப்போது வந்தாலும், நாங்கள் சொல்வதை போல எங்களுடன் இருக்க வேண்டும் என்று மிரட்டுகின்றனர். மிரட்டல் காரணமாக, ஊருக்குள் இருக்கவே பயமாக இருக்கிறது. அருகிலுள்ளவர்கள் எங்களுக்கு உதவியாக இருப்பதால், நாங்கள் அங்கு வசித்து வருகிறோம். எனவே, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்டவாறு சுமதி தெரிவித்துள்ளார். புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

Related posts

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: SETC மேலாண் இயக்குநர் தகவல்!

வரும் 21ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று டெல்லி திரும்புகின்றனர்: தமிழக அரசுக்கு பாராட்டு