3 வேளாண் சட்டங்கள் பற்றிய அறிக்கையை வெளியிடுங்கள்: தலைமை நீதிபதிக்கு குழு உறுப்பினர் கடிதம்

புதுடெல்லி: ‘வேளாண் சட்டங்கள் குறித்து ஆய்வுக்குழு அளித்துள்ள அறிக்கையை வெளியிட வேண்டும்,’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இக்குழுவின் உறுப்பினர் கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்தினர். இந்த சட்டங்களை  ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், இந்த சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன் அறிவித்தார். 29ம் தேதி தொடங்கும் குளிர்கால கூட்டத் தொடரில் இந்த மசோதாவை திரும்ப பெறப்பட உள்ளது.  இந்நிலையில், இந்த வேளாண் சட்டங்களின் சாதக, பாதகம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக, சேத்காரி சங்கதன் அமைப்பின் மூத்த தலைவர் அனில் கன்வாட் தலைமையில் மூன்று நபர் குழுவை உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு அமைத்தது. இந்த குழுவினர் தாக்கல் செய்த அறிக்கையை இதுவரை உச்சநீதிமன்றம் வெளியிடவில்லை. இந்நிலையில், இக்குழுவின் உறுப்பினர் அனில் கன்வாட், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில், ‘நடப்பு குளிர்கால கூட்டத் தொடரின் போது வேளாண் சட்டங்களை திரும்ப பெற ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. எனவே, எங்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கையால் பயனில்லை. இருந்தாலும், மக்கள் நலனுக்காக அந்த அறிக்கையை உச்ச நீதிமன்றம் வெளியிட வேண்டும் அல்லது அறிக்கையை வெளியிட எங்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். இந்த சட்டத்தின் தேவைகளை அதில் வலியுறுத்தி உள்ளோம். வேளாண் சட்டங்கள் குறித்து புரிதல் இல்லாத விவசாயிகளை சில தலைவர்கள் தவறாக வழி நடத்துகின்றனர்,’ என்று கூறியுள்ளார்….

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!