3 பாயின்ட் சீட் பெல்ட் இனிமேல் கட்டாயம்: கார் தயாரிப்பாளர்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: ‘கார் தயாரிப்பாளர்கள்  இனிமேல் அனைத்து இருக்கைகளிலும் ‘மூன்று பாயின்ட் சீட் பெல்ட்’ மட்டுமே பொருத்த வேண்டும்,’ என்று ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.தற்போது காரில் பயணிப்பவர்களில் ஓட்டுனர், ஓட்டுனர் அருகே அமர்ந்திருப்பவர், பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களில் இருவர் மட்டுமே ‘3 பாயின்ட் சீட் பெல்ட்’ அணிய முடிகிறது. பின் இருக்கையில் நடுப்பகுதியில் அமர்ந்திருப்பவருக்கு, விமானங்களில் பயன்படுத்தப்படுவது போல் இடுப்பில் பொருத்தப்படும் பெல்ட் மட்டுமே பொருத்தப்படுகிறது. இதனால், விபத்து நேரிடும் போது அவர்களின் பாதுகாப்பு குறைகிறது. எனவே, இனிமேல் அனைத்து கார்களிலும், 3 பாயின்ட் சீட் பெல்ட் கட்டாயமாக்கப்படுகிறது.இது குறித்து ஒன்றிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், ‘‘இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் 1.5 லட்சம் பேர் மரணம் அடைகின்றனர். விபத்து ஏற்படும் போது, 2 பாயின்ட் சீட் பெல்ட் அணிந்தவர்களுக்கு அதிகமான காயமும், உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவே கார்களில் 3 பாயின்ட் சீட் பெல்ட்டுகள் கட்டாயமாக்கப்படுகிறது. இனிமேல் கார் தயாரிப்பாளர்கள்  அனைத்து சீட்களிலும் 3 பாயின்ட் சீட் பெல்ட் பொருத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,’’ என்றார். 3 பாயின்ட் சீட் பெல்ட்,  2 பாயின்ட் சீட் பெல்ட்டை விட பாதுகாப்பானது. இந்த வகை சீட் பெல்ட்டை அணியும் போது, விபத்தின்போது எதிர்வாகனத்தின் மீது கார் மோதினாலும் காயம் அதிகமாக ஏற்படுவது தவிர்க்கப்படும் என்று போக்குவரத்து நிபுணர்கள் பலர் தெரிவித்துள்ளனர்….

Related posts

மேகாலயாவில் வௌ்ளம் 10 பேர் பலி

மணிப்பூரில் கலவரத்தின்போது காவல்நிலையத்தில் இருந்து திருடப்பட்ட 80% ஆயுதங்கள் மீட்பு

உத்தரகாண்ட் மலையில் சிக்கி தவித்த 2 வெளிநாட்டு வீராங்கனைகள் மீட்பு