3 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்-தொழிற்சாலை கழிவு கலப்பதை தடுக்க வலியுறுத்தல்

காவேரிப்பட்டணம் : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த பையூர் ஊராட்சியில் உள்ள வண்ணான்குட்டை ஏரி 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் ரோகு, கட்லா, மிர்க்கால், ஜிலேபி உள்ளிட்ட மீன் வகைகள் வளர்க்கப் படுகிறது. தினமும் 100 கிலோ மீன்கள் பிடிக்கப்படும் நிலையில், சனி, ஞாயிறுக்கிழமைகளில், 2 டன் அளவிற்கு மீன்கள் பிடித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக, ஏரியில் அதிகளவு மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து ஏரியின் மீன்பிடி குத்தகைதாரர்கள் கூறுகையில், ‘தற்போது ஏரிக்கு வரும் தண்ணீர் மிகவும் மாசடைந்துள்ளது. ஏரிக்கு தண்ணீர் வரும் வழியில், தனியார் மாங்கூழ் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை முறையாக சுத்தம் செய்யாமல், அப்படியே வெளியேற்றுவதால், ஏரியில் கலந்து தண்ணீர் மாசடைகிறது. ஏரியில் அமோனியா வாயு மிக அதிக அளவில் கலந்துள்ளது. இதனால் தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளதால், மீன்கள் சுவாசிக்கும் தன்மை குறைந்து, அதிக அளவு இறப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது,’ என்றார்.இந்த ஏரியில் இருந்து செல்லும் தண்ணீர் 3 ஊர்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. எனவே, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஏரியில் செத்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும், ஏரியில் தொழிற் சாலையின் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

கோவையில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தது போலீஸ்