3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், போலீசாரின் விவரங்கள் சேகரிப்பு இம்மாதத்திற்குள் முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு நாடாளுமன்ற தேர்தலையொட்டி

வேலூர், ஜன.3: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், போலீசாரின் விவரங்கள் சேகரிக்கும் பணி தொடங்கி உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024ம் ஆண்டு ஏப்ரல், மே மாதம் நடக்க உள்ளது. அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக இத்தேர்தலுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் பணிகள் நடந்து முடிந்துள்ளது. தற்போது புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் விவரங்களை சேகரித்து அனுப்பும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதற்காக தற்போது ஒவ்வொரு துறை வாரியாக பட்டியல் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது 3 ஆண்டுகளாக ஒரே மாவட்டத்தில் தொடர்ந்து பணியாற்றி வரும் அதிகாரிகளை வேறு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்ய அனைத்து தலைமை செயலாளர்களுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. மேலும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய ஜனவரி 31ம் தேதி வரை தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது. குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், கலெக்டர் அலுவலக அதிகாரிகள், மாவட்ட அளவிலான அதிகாரிகளையும் இடமாற்றம் செய்யப்பட வேண்டும். அதேபோல் சொந்த மாவட்டங்களிலும் பணியாற்றும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் விவரங்களை சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தண்டனை நடவடிக்கைக்கு உள்ளானவர்கள், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், ஆறு மாதங்களுக்குள் ஓய்வு பெறுபவர்கள் ஆகியோருக்கு தேர்தல் பணியை வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள். அதன்படியே தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு