3வது டெஸ்ட் இன்று தொடக்கம் வெற்றியை தொடருமா இந்தியா

லீட்ஸ்: இங்கிலாந்து – இந்தியா மோதும் 3வது டெஸ்ட் போட்டி, ஹெடிங்லி மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிய, 2வது டெஸ்ட்டை இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அசத்தியது. இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க 3வது டெஸ்ட் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியிலும் வென்று முன்னிலையை அதிகரிக்க இந்திய அணி கூடுதல் உற்சாகத்துடன் களமிறங்குகிறது. தொடக்க வீரர்கள் ரோகித், ராகுல் நல்ல பார்மில் உள்ளனர். ரகானே, புஜாரா பொறுப்பாக விளையாடுவது அணிக்கு கூடுதல் பலம். கேப்டன் கோஹ்லி மட்டுமே பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் சற்று தடுமாறி வருகிறார். ஷமி, பும்ராவின் சிறப்பான ஆட்டம் பின் வரிசை பேட்டிங் வலிமையை நிரூபித்துள்ளது. இந்திய அணியின் வேகக் கூட்டணி தான் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றால் மிகையல்ல. அந்த அளவுக்கு ஷமி, பும்ரா, சிராஜ், இஷாந்த் ஆகியோரின் பந்துவீச்சு அசத்தலாக உள்ளது. அதேசமயம், சொந்த மண்ணில்…  அதுவும் ஆடுகளத்தை தங்களுக்கு சாதகமாக தயாரித்தும்  வெற்றி கிடைக்காமல் தவிக்கிறது இங்கிலாந்து.  கேப்டன் ஜோ ரூட்  தவிர மற்றவர்களின் பேட்டிங் எடுபடவில்லை. முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக  அவதிப்படுவதும் அந்த அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.முன்னிலையை அதிகரிக்க இந்தியாவும், பதிலடி கொடுக்க இங்கிலாந்தும் வரிந்துகட்டுவதால் இப்போட்டியில் அனல் பறப்பது உறுதி. இந்தியா: கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல், செதேஷ்வர் புஜாரா, மயாங்க் அகர்வால், அஜிங்க்யா ரகானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், விரித்திமான் சாஹா, அபிமன்யு ஈஸ்வரன், பிரித்வி ஷா, சூரியகுமார் யாதவ். இங்கிலாந்து: ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரன், ஹசீப் ஹமீத், டான் லாரன்ஸ், சாகிப் மகமூத், டேவிட் மலான், கிரெய்க் ஓவர்டன், ஆலிவர் போப், ஆலிவர் ராபின்சன்.லீட்சில் இந்தியா…ஹெடிங்லி அரங்கில்  இந்தியா இதுவரை 6 டெஸ்ட்களில் விளையாடி உள்ளது. அதில் 1952, 1959, 1967ல் நடந்த 3 டெஸ்ட்களிலும் இங்கிலாந்து வென்றுள்ளது. 1979ல் நடந்த டெஸ்ட் டிராவானது. 1986, 2002ல் நடந்த கடைசி 2 டெஸ்ட்களையும் இந்தியா வென்றது. ஹெடிங்லி அரங்கில் இந்தியா கடைசியாக 2019ல் ஒருநாள் உலக கோப்பை போட்டியில் விளையாடியது. இலங்கைக்கு எதிரான அந்த லீக் ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது….

Related posts

சில்லிபாயிண்ட்…

பாகிஸ்தான் – இங்கிலாந்து முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

சீனா ஓபன் டென்னிஸ் கோகோ காஃப் சாம்பியன்