2 கட்டுமான நிறுவன அதிபர்களுக்கு சொந்தமான 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை: இரண்டு கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் பின்னி மில் அமைந்துள்ள இடத்தில் பிரமாண்ட குடியிருப்பு கட்ட தி.நகரை சேர்ந்த லேன்ட் மார்க் ஹவுசிங் பிராஜெக்ட்ஸ் லிமிடெட் மற்றும் கே.எல்.பி. பிராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய 2 கட்டுமான நிறுவனம் குடியிருப்பு கட்டியுள்ளது. பின்னி மில் இடத்தை வாங்கியதில் ரூ.120 கோடி கணக்கில் கட்டாமல் ரொக்கமாக வழங்கப்பட்டது குறித்து வருமான வரித்துறை சோதனை நடத்தினர். இந்த சோதனையில் தான் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்தது தெரியவந்தது. இந்த மோசடி குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தியது. இதை தொடர்ந்து சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக ரூ.50 கோடி லஞ்சம் வழங்கியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளது.

அதைதொடர்ந்து பின்னி மில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிய சென்னை தி.நகர் 27வது தெருவில் உள்ள லேன்ட் மார்க் ஹவுசிங் பிராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் மேலான் இயக்குநர் உதயகுமாரின் வீடு, அதேபோல், புளியந்தோப்பு படாளம் ஸ்ட்ராஹன்ஸ் சாலையில் அமைந்துள்ள கே.எல்.பி. பிராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இயக்குநர்கள் சுனில் கேட்பாரியா, மனீஷ் பார்மர் ஆகியோர் அலுவலகம் மற்றும் வீடுகள், எம்ஜிஎம் கோல்டு மதுபான உரிமையாளர் அரவிந்த் வீடு, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆடிட்டர் கணபதி வீடு என மொத்தம் 10 இடங்களில் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிக்கள் பலர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வாங்கல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு!

காயல்பட்டினத்தில் வீட்டுமுன் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடிச் செல்லும் மர்மநபர்: வீடியோ வைரலால் பரபரப்பு

பெரம்பலூர் அருகே ஒன்றிய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!