2வது சீசனுக்கு தயாராகும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பராமரிப்பு பணிகள் தீவிரம்

ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2வது சீசனுக்காக பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.நீலகிரி மாவட்டம் சுற்றுலா தளங்கள் நிறைந்த மாவட்டமாகும். ஏப்ரல், மே மாதங்களில் முதல் சீசனும், செப்டம்பர் முதல் நவம்பர் வரை 2வது சீசனும் கடைபிடிக்கப்படுகிறது. 2வது சீசன் சமயத்தில் சாதாரண நாட்களில் வரும் சுற்றுலா பயணிகளின் வரத்தை காட்டிலும் சற்று அதிகமாக காணப்படும்.

குறிப்பாக வெளிநாடு, வெளி மாநில சுற்றுலா பயணிகள் மற்றும் தேனிலவு தம்பதிகள் அதிகளவு வருவார்கள். அப்போது, சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரங்கள் செய்யப்படும். இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்வார்கள். இந்தாண்டு 2வது சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஊட்டியில் உள்ள பூங்காக்களில் மலர் நடவு பணிகள் நடந்தன. குறிப்பாக, ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் அதிகம் பார்வையிடும் தாவரவியல் பூங்காவில் கடந்த மாதம் நடவு பணிகள் துவங்கப்பட்டன.

பூங்காவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாத்திகளில் இன்கா மேரிகோல்டு, பிரெஞ்ச் மேரிகோல்டு, ஆஸ்டர், வெர்பினா, லூபின், கேன்டிடப்ட், காஸ்மஸ், கூபியா, பாப்பி, ஸ்லீட் லில்லியம், அஜிரெட்டம், கிரைசாந்திமம், கேலண்டுலா, ஹெலிக்ரைசம், சப்பனேரியா, பெட்டூனியா போன்ற 60 வகைகளில் 4 லட்சம் மலர்களின் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர, மலர் அலங்காரத்திற்காக 15 ஆயிரம் தொட்டிகளில் சால்வியா, டெய்சி, டெல்பினியம், டேலியா, கேலாலில்லி, ஆத்துரியம் போன்ற 30 வகையான நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. பாத்திகள், தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள மலர்செடிகளை பராமரிக்கும் பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது.

மேலும், மலர் செடிகள் வளர இடையூறாக வளர்ந்துள்ள களை செடிகளையும் அகற்றும் பணிகளில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். புல் மைதானங்களில் வளர்ந்துள்ள புற்களை வெட்டி அகற்றி சமன்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தற்போது, ஊட்டியில் மழை பெய்து வருவதால் பாத்திகளில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் செடிகள் செழித்து வளர துவங்கியுள்ளன. இதனால், 2வது சீசனுக்கு ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஏராளமான மலர் செடிகள் பூத்து குலுங்கும் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!