2 மாஜி மந்திரிகளை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் சேலத்துக்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ரொம்ப எதிர்பார்ப்போடு டெல்டாவுக்கு போன சேலத்துக்காரர் கடும் அப்செட்டாகி விட்டாராமே…’’ என முதல் கேள்வியை கேட்டார் பீட்டர் மாமா.
‘‘டெல்டாவில் கடலோரம், நெற்களஞ்சியம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சில தினங்களுக்கு முன் சேலத்துக்காரர் வந்து இருந்தார். இலை கட்சி தொண்டர்கள் மத்தியில் தனக்கு பெரிய அளவில் வரவேற்பும், ஆரவாரம் இருக்கும்னு அவர் ரொம்பவே எதிர்பார்ப்போடு வந்திருக்கிறாரு.. ஆனால், தான் எதிர்பார்த்தது நடக்காததால சேலத்துக்காரர் கடும் அப்செட்டில்தான் நிகழ்ச்சிகளிலேயே கலந்துக்கிட்டாராம்… இதுல வேற கடலோர மாவட்டத்தில் மாற்று கட்சியினர் பெரிய அளவில் இலை கட்சியில் இணைய போவதாகவும் சேலத்துக்காரரிடம் மாஜி அமைச்சர் கதைவிட்டு இருந்தாராம்.. ஆனால், குறைந்த அளவில்தான் மாற்று கட்சியினர் இணைஞ்சிருக்காங்க.. இதனால் மாஜி அமைச்சர் மீதும் சேலத்துக்காரர் கடும் கோபத்தில் இருக்கிறாராம்.. கடலோர மாவட்டத்தில் திரைமறைவில் இருந்து வரும் கோஷ்டி பூசல் சேலத்துக்காரர் நிகழ்ச்சியில் வெட்ட வெளிச்சத்துக்கு வந்திருக்கு.. இதனால் சேலத்துக்காரர் 2 மாஜி அமைச்சர்களையும் எச்சரித்துட்டு போன பிறகும்கூட அவர்கள் கண்டுகொள்ளவில்லையாம்.. வழக்கம் போல், அவர்கள் செயல்பட்டுகிட்டு தான் இருக்காங்களாம்… கட்சியில் நிலவும் கோஷ்டி பூசலுக்கு சேலத்துக்காரரால் கூட முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லையேன்னு நிர்வாகிகள் புலம்புகிறார்களாம்..’’ என்றார் விக்கியாந்தா.
‘‘புறம்போக்கு நிலம் பதிவு, தோட்டத்துல பணம் புதைப்புன்னு பரபரப்பா இருக்குற பதிவு டிபார்ட்மெண்ட் பற்றி சொல்லுங்க பார்ப்போம்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல காட்டுப்பாடி தாலுகாவுல பத்திரத்தை பதியுற அலுவலகம் இயங்கி வருது. இந்த அலுவலகத்துல கிரிவலம் கடவுள் பெயரை கொண்டவரு பணியாற்றி வந்தாரு.. இவரு பதிவு அலுவலரு இல்லாத நேரத்துல, பொறுப்பா இருப்பாருன்னு, பொறுப்பு அதிகாரியாக நியமிச்சாங்களாம்.. ஆனா அந்த அலுவலக கட்டுப்பாட்டுல இருக்குற புறம்போக்கு நிலத்தை, பத்திரமாக மாற்றி பதிவு செஞ்சி கொடுத்திருக்காராம்.. அதோட, அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளையும், பதிவு செஞ்சி, பல எல்களை கறந்துட்டாராம்.. இவரோட இந்த முறைகேடுகள் எல்லாம் பதிவு மண்டல அதிகாரிக்கு புகாராக போயிருக்குதாம்.. அப்புறம் கிரிவலம் கடவுள் பெயர் கொண்டவருக்கு பதிவு பணி ஒதுக்காம, அலுவலக பணிய கொடுத்திருக்காங்க.. அப்பவும் பதிவு அலுவலரு லீவுல போனா, இவரு குஷியாகிவிடுகிறாராம்.. அதாவது எதுல எவ்வளவு வாங்கலாம்னு கணக்கு போட்டு வேலை செய்வாராம்… தணிக்கை செஞ்சதுல 8 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை பதிவு செஞ்சது வெளிச்சத்துக்கு வந்திருக்குது.. இப்ப இவரை சஸ்பெண்ட் செஞ்சிருக்காங்க.. இந்த பரபரப்பு அடங்குறதுக்குள்ளவே, இன்னொரு பூதம் கிளம்புன மாதிரி, காட்டுப்பாடி பதிவு அலுவலகத்துலயே பெயரில் ஆனந்தத்தை கொண்டவரான பொறுப்பு அதிகாரி மேல விஜிலென்ஸ் பார்வை விழுந்திருக்குதாம்.. ஆபிஸ் ரெய்டுல ஆங்காங்கே மறைச்சு வெச்ச 2.14 கே வரைக்கு சிக்கியிருக்கு.. அடுத்த நாளே அவரு வீட்டுல ரெய்டு போனதுல, வீட்டுக்கு பின்னாடி தோட்டத்துல மண்ணை தோண்டியிருக்காங்க, அங்க பிளாஸ்டிக் கவர்ல சுத்தி வெச்சிருந்த 12 கே சிக்கியிருக்கு.. இப்படி பதிவுத்துறையில அடுத்தடுத்து 2 பேர் சிக்குன மேட்டர் தான் பரபரப்பாக பேசப்படுது. அதோட, புறம்போக்கு இடத்தை பதிவு செஞ்சதுக்கு யார், யார் துணை போனாங்கன்னு பார்த்து மொத்த கருப்பு ஆடுகளையும் களையெடுக்க வேலை நடந்துகிட்டிருக்குதுன்னு விஷயம் தெரிஞ்சவங்க பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்னையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லணும்னு கோரிக்கை வைத்திருக்காங்களாமே தொழிற்சங்கங்கள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘குமரி மாவட்ட அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு கொடுக்கப்பட வேண்டும். அதன்படி 1.12.2022 புதிய சம்பள உயர்வு வழங்கப்படணுமாம்.. இதுதொடர்பா இதுவரைக்கும் 4 கட்ட பேச்சுவார்த்தை நடந்து இருக்கு… கடைசியாக மார்ச்சில் பேச்சுவார்த்தை நடந்தபோது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தேர்தலுக்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம்னு அதிகாரிகள் சொல்லியிருக்காங்க.. இப்போது தேர்தல் முடிஞ்சு, நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்ட பின்னரும் பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங்கங்களை அழைக்க வில்லையாம்.. சம்பந்தப்பட்ட அதிகாரியை பார்த்து நினைவுப்படுத்த தொழிற்சங்க நிர்வாகிகள் போனால், சந்திக்க முடிய வில்லையாம்.. அரசுக்கு இந்த பிரச்னையை கொண்டு போகாமல் இன்னும் அதிகாரிகள் மட்டத்திலேயே இருப்பதாக சொல்கிறாங்க.. சட்டப்பேரவை கூட்டம் நடந்துகொண்டு இருக்கிற நேரத்தில் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் சம்பள பிரச்னையை அரசின் கவனத்துக்கு கொண்டு போய் நடவடிக்கை எடுக்கணும்னு தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்திருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

சென்னையில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை.. ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய மாநகராட்சி நடவடிக்கை!!

84 நீர்நிலைகளில் படிந்துள்ள களிமண், வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுக்க அனுமதி: அரசிதழில் வெளியீடு

நாகை அருகே 200 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது