2 கோடி தொண்டரில்லை… ரூ.2 லட்சம் கோடி இருக்கு: துரோகத்திற்கு பெயர் போனவர் புரட்டு தமிழர்

சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட அமமுக நிர்வாகிகள் கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட, வலுவான கூட்டணியை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சில நாட்களில் கூட்டணியை அறிவிப்போம். நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில், அமமுக நிச்சயம் இருக்கும். தேர்தலின் போது, மாநிலம் முழுவதும் சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என்பதால் போட்டியிடவில்லை எனக்கூறியிருந்தேன். ஆனால், தேர்தலில் போட்டியிட எனக்கு எந்த தயக்கமும், பயமும் இல்லை.

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக எடப்பாடி பழனிசாமி கம்பெனி இருந்த போது, மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து, கோடிக்கணக்கில் சேர்த்து வைத்துள்ளனர். அந்த பணத்தைக் கொண்டும், இரட்டை இலை சின்னத்தை வைத்தும், தேர்தலில் சாதித்து விடலாம் என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். ஆனால், அது நடக்காது. அவர் மதுரையில் புளியோதரை மாநாடு நடத்தி, தனக்கு தானே புரட்சி தமிழர் பட்டத்தை வழங்கிக் கொண்டார். துரோகத்திற்கு மறு பெயர் அவர் தான். அவர் புரட்டு தமிழர் என்பது விரைவில் தெரியவரும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘ராமர் கோவில் கட்டியதால், வட மாநிலங்களில் பாஜவுக்கு ஆதரவு பெருகியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், தமிழ்நாட்டில் ஆதரவு பெருகி உள்ளதா என்பது தேர்தலுக்கு பிறகு தான் தெரியவரும். துரோகமும், ஏமாற்று வேலையும் மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்த அரசியல். சட்டமன்ற தேர்தலின் போது, வன்னியருக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை அறிவித்து ஏமாற்றியவர். தற்போது சிறுபான்மையினரின் ஆதரவுக்காக குல்லா போட்டு வலம் வருகிறார்.

ஆனால், சிறுபான்மையினர் ஏமாற மாட்டார்கள். எடப்பாடியிடம் 2 கோடி தொண்டர்கள் இல்லை. 2 லட்சம் கோடி பணம் தான் இருக்கிறது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் போலீசார் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் ஆளுநர், ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பதாக கருதுகிறேன். ஆளுநர் என்பது மிக முக்கியமான பதவி. அதை உணர்ந்து தமிழக ஆளுநர் செயல்படுவதே அவருக்கும், அந்த பதவிக்கும் அழகு,’’ என்றார்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: தவெக தலைவர் விஜய்

ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சாமியாரின் உதவியாளர் கைது

திருச்சி மாவட்டம் பாடாலூர் அருகே இன்று அதிகாலை விபத்து: காரில் பயணித்த பெண் பலி