போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் 2 குடியுரிமை அதிகாரிகள் சஸ்பெண்ட்: இமிகிரேஷன் தலைமை ஆணையர் உத்தரவு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் மேலும் 2 குடியுரிமை அதிகாரிகள் இமிகிரேஷன் தலைமை ஆணையரின் அதிரடி உத்தரவால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில், வெளிநாடு செல்லும் விமான பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதித்து அனுப்புவதற்காக, குடியுரிமை பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இது ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பிரிவாகும். இந்த பிரிவின் தலைமை அலுவலகம், சென்னை சாஸ்திரி பவனில் உள்ளது. இந்த பிரிவில் பணியாற்றுவதற்கு காவல்துறை, மத்திய உளவுத்துறையான ஐ.பி மற்றும் அரசு அதிகாரிகள், டெப்டேஷன் முறையில் பணி அமர்த்தப்படுகின்றனர். இந்நிலையில், அவ்வாறு டெப்டேஷன் முறையில் பணியமர்த்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர், சரவணன் என்பவர் கடந்த ஓராண்டாக, சென்னை விமான நிலைய குடியுரிமை பிரிவில், இமிகிரேஷன் அதிகாரியாக பணியாற்றினார்.

இந்த இமிகிரேஷன் அதிகாரிகள், அலுவலர்கள், மற்றும் ஊழியர்கள் முறைகேடுகள் எதிலும் ஈடுபடாமல், சரியாகப் பணியாற்றுகிறார்களா, என்பதை கண்காணிப்பதற்காக, விஜிெலன்ஸ் பிரிவு ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த விஜிலென்ஸ் பிரிவு கண்காணிப்பின்போது, இமிகிரேஷன் அதிகாரி சரவணன் மீது, சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து சரவணனை விஜிலென்ஸ் பிரிவு, தீவிரமாக தொடர்ந்து கண்காணித்தனர். அப்போது சரவணன், வெளிநாடுகளுக்கு செல்ல வரும் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் பரிசோதிக்கும்போது, முறைகேடுகளில் ஈடுபடுவதும், அதேபோல் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம், முறைகேடுகளில் ஈடுபடுவதையும் கண்டுபிடித்தனர். உடனடியாக விஜிலென்ஸ் பிரிவினர், சென்னை சாஸ்திரி பவனில் உள்ள, இமிகிரேஷன் தலைமை ஆணையருக்கு, சரவணன் குறித்து அறிக்கை அனுப்பினர். இதனால் சரவணனை, இமிகிரேஷன் தலைமை ஆணையர், கடந்த சில தினங்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இதில் மிக முக்கிய பிரிவான இமிகிரேஷன் பிரிவில், கருப்பு ஆடாக செயல்பட்டு, போலி பாஸ்போர்ட் போன்றவைகளில் பயணிப்பவர்களுக்கு, குடியுரிமை அதிகாரி ஒருவரே துணை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகம், மற்றும் இந்திய குடியுரிமை தலைமை அலுவலகம் ஆகியவற்றுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை அடுத்து டெல்லியில் உள்ள இமிகிரேஷன் பிரிவு தலைமை அலுவலகத்தில் இருந்து, விரிவாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஒன்றிய உளவு பிரிவான ஐபியும் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஏற்கனவே பிடிபட்ட சரவணனைப் போல், மேலும் சிலர், சென்னை விமான நிலைய குடியுரிமைப் பிரிவில், கருப்பு ஆடுகளாக செயல்பட்டு, போலி பாஸ்போர்ட்டில் பயணிக்கும் பயணிகளுக்கு உடந்தையாக செயல்படுவது தெரிய வந்தது. இதை அடுத்து அவ்வாறு கருப்பு ஆடுகளாக செயல்பட்ட மேலும் இரண்டு குடியுரிமை அதிகாரிகளை, விஜிலென்ஸ் பிரிவு, மற்றும் ஐபி அதிகாரிகள் அடையாளம் கண்டுபிடித்தனர். அவர்கள் குறித்து முறைப்படி சென்னை சாஸ்திரி பவனில் உள்ள, தலைமை குடியுரிமை ஆணையருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. அதன் பேரில் குடியுரிமை தலைமை ஆணையர், மேலும் இரண்டு குடியுரிமை அதிகாரிகளை தற்போது சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் பயணிக்கும் பயணிகளுக்கு உடனடியாக செயல்பட்ட கருப்பு ஆடுகளான குடியுரிமை அதிகாரிகள் 3 பேர் இதுவரையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதோடு மேலும் தொடர்ந்து விசாரணை ரகசிய கண்காணிப்புகள் நடந்து வருகின்றன. இதனால் இன்னும் சிலர் சிக்குவதற்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் மூன்று பேருமே போலி பாஸ்போர்ட்களில் பயணிக்கும் பயணிகளுக்கு உடந்தையாக செயல்பட்டு உள்ளதோடு, தங்கம் கடத்தலுக்கும் உடந்தையாக செயல்பட்டு உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து முறைப்படி சுங்க அதிகாரிகள், மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஆகியோருக்கு தகவல் தெரிவித்து, அவர்களும் விசாரணை நடத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து சுங்கத்துறை தரப்பில் கூறும்போது, இமிகிரேஷன் அலுவலர்கள் 3 பேரின் செயல்பாடுகள் குறித்து, விஜிெலன்ஸ் அதிகாரிகளின் விசாரணை இன்னும் முடியவில்லை.

அவர்கள் விசாரணை முழுமையாக முடிந்து, முறையான அறிக்கை கொடுத்த பின்பு, இவர்கள் மூன்று பேரும் தங்கம் கடத்தும் கடத்தல் குருவிகளுக்கு எவ்வாறு உதவியாக செயல்பட்டனர், என்பது குறித்து நாங்கள் முறைப்படி விசாரணை மேற்கொள்வோம். ஆனால் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 267 கிலோ தங்கம் கடத்தலுக்கும், இந்த இமிகிரேஷன் அலுவலர்கள் சஸ்பெண்டுக்கும் சம்பந்தம் இல்லை என கூறினர்.
சென்னை விமான நிலையத்தில், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் மிக முக்கியமான பிரிவான, குடியுரிமை அலுவலகத்தில்,3 குடியுரிமை அதிகாரிகளே, போலி பாஸ்போர்ட்டுகளில் பயணிப்பவர்களுக்கு உறுதுணையாக செயல்பட்டு, கையும் களவுமாக பிடிபட்டு, மூன்று குடியுரிமை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Related posts

கோவை மருதமலை கோயிலுக்கு காரில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

இந்தியாவில் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது : ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி

ஜி.எஸ்.டி. பற்றி கேள்வி எழுப்பிய விவகாரம்.. கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளரிடம் மன்னிப்புகேட்ட அண்ணாமலை..!!