மினி வேனில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது: 3 டன் பறிமுதல்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் தாலுகா பகுதியில் தொடர்ந்து கள்ள சந்தையில் ரேஷன் அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும், அதனை புரோக்கர்கள் மூலம் கொள்முதல் செய்து டன் கணக்கில் வாகனங்களில் கடத்துவதாகவும் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, குற்ற புலனாய்வுத்துறையின் ஐஜி தோஷி நிர்மல்குமார் உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ரஜீத் தலைமையில் காவலர்கள் நேற்று திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு மினி வேனை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

உடனே வேனை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்ற 2 பேரை காவலர்கள் துரத்திச் சென்று பிடித்தனர். விசாரணையில், அவர்கள் காஞ்சிபுரம் ஒலி முகமதுபேட்டையை சேர்ந்த சலீம் (30) மற்றும் கூடுவாஞ்சேரி அஸ்தினாபுரத்தை சேர்ந்த வரதன் (50) என்பதும், திருக்கழுக்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் ரேஷன் கடைகளிலிருந்து கள்ளச்சந்தையில் அரிசியை வாங்கி கடத்திச் சென்றதும் தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 3 டன் ரேஷன் அரிசி மற்றும் மினிவேன் பறிமுதல் செய்யப்பட்டன. 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு கிளைச் சிறையில் அடைத்தனர்.

 

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை