பதிவுத்துறையில் 2 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து ஐஜி ஆலிவர் பொன்ராஜ் அதிரடி உத்தரவு


சென்னை: கோவையில் ரூ.300 கோடி அரசு சொத்தை போலி பத்திரப்பதிவு செய்த மற்றும் 8 ஆயிரம் ஏக்கர் அரசு நிலத்தை அபகரிக்க திட்டமிட்டு பதிவு செய்த 2 பதிவுத்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து, பதிவுத்துறை ஐஜி ஆலிவர் பொன்ராஜ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவையில் விஐபிக்கள் வசிக்கும் பகுதியாக இருப்பது ரேஸ்கோர்ஸ். இந்தப் பகுதியில் ஒரு சென்ட் நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடி வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் உள்ள 1.75 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை போலியான ஆவணங்களைக் கொண்டு ஒரு கும்பல் தனியாருக்கு விற்பனை செய்துள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு மட்டும் ரூ.300 கோடி என்று கூறப்படுகிறது. அரசு ஆவணங்களில் அது அரசு புறம்போக்கு என்று உள்ளது. ஆனால் அரசு ஆவணங்களை ஆய்வு செய்யாமல் வடக்கு கோவை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளதாக பதிவுத்துறை ஐஜி ஆலிவர் பொன்ராஜூக்கு தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார். அந்த உத்தரவைத் தொடர்ந்து, அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மாவட்ட பதிவாளர் அந்தஸ்தில் நியமிக்கப்பட வேண்டிய இடத்தில் ஒரு உதவியாளர் நியமிக்கப்பட்டிருப்பதும், அவர் மூலம் இந்த முறைகேடு நடத்திருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த முறைகேட்டில் மாவட்ட பதிவாளர் அளவில் உள்ள சில அதிகாரிகள் உடந்தையாக இருந்த, முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து ரூ.300 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் சுருட்டியதாக உதவியாளர் ஜெயசுதாவை சஸ்பெண்ட் செய்து, பதிவுத்துறை ஐஜி ஆலிவர் பொன்ராஜ் உத்தரவிட்டார். அதேபோல, நெல்லை மாவட்டம் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் உள்ள சுமார் 8 ஆயிரம் ஏக்கர் காப்புக்காட்டை போலி ஆவணம் மூலம் அம்பாசமுத்திரம் பதிவு அலுவலகத்தில் அந்த சொத்துக்கள் சிங்கம்பட்டி ஜமீனுக்கு சொந்தமானது போன்ற ஆவணங்களை தயாரித்து, அதை அடமான பத்திரமாக பதிவு செய்திருப்பதாக பதிவுத்துறை ஐஜி ஆலிவர் பொன்ராஜூக்கு தகவல் கிடைத்தது.

இது குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார். விசாரணையில், அம்பாசமுத்திரம் பதிவு அலுவலகத்தில் அரசுக்கு சொந்தமான காப்புகாட்டை போலி ஆவணம் மூலம் அடமான பத்திரமாக பதிவு செய்திருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து அம்பாசமுத்திரம் சார்பதிவாளர் சாந்தியை சஸ்பெண்ட் செய்து, ஐஜி ஆலிவர் பொன்ராஜ் உத்தரவிட்டார். அரசு நிலத்தை அபகரிக்க முயன்றவர்களுக்கு துணைபோன 2 பதிவுத்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐஜியின் இந்த அதிரடி நடவடிக்கையால் பதிவுத்துறையில் பணியாற்றும் மோசடி அதிகாரிகள் பீதியடைந்துள்ளனர். அதேநேரத்தில் கோவையில் நடந்த முறைகேட்டில் சில மாவட்ட பதிவாளர்களும் உடந்தை என்று கூறப்படுவதால், இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தொடரும் முறைகேடு
தமிழகத்தில் அதிகமான தொழிற்சாலைகள் ஓசூரில் தொடங்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு ரியல் எஸ்டேட் தொழில் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. அந்தப் பகுதியில் அரசு அனுமதி பெறாத ஆவணங்கள் பதியப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகின. அதன்பின்னரும் தினமும் 40 முதல் 40 அனுமதி பெறாத மனைகள் பதிவு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஓசூரில் ஆய்வு நடத்தினால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், அந்த ஆய்வுகளை நடத்த விடாமல் மேற்கு மண்டலத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள் தடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக ஆய்வுப் பணிகளை தொடங்கினால் அரசுக்கு இழப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!