கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 292 ஆசிரியர்களுக்கு வெள்ளிக்காசு

*அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 292 ஆசிரியர்களுக்கு கேடயம் மற்றும் வெள்ளிக் காசுகளை அமைச்சர் சக்கரபாணி வழங்கி பாராட்டினார்.
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஆசிரியர் தினவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்தார். கலெக்டர் சரயு, சட்டமன்ற உறுப்பினர்கள் பர்கூர் மதியழகன், ஓசூர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பாக பணிபுரிந்த 292 ஆசிரியர்களுக்கு கேடயம் மற்றும் வெள்ளிக் காசுகளை வழங்கி அமைச்சர் பாராட்டினார்.

அப்போது, அவர் பேசியதாவது: மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி, ஆண்டுதோறும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது மற்றும் மாநில அளவில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற விழாவில் சிறப்பாக பணிபுரிந்த 292 ஆசிரியர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக கேடயங்கள் மற்றும் வெள்ளிக் காசுகள் வழங்கப்பட்டுள்ளது.

தாய், தந்தைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வைத்து வணங்க கூடியவர்கள் ஆசிரியர் பெருமக்கள். மாணவ செல்வங்களை அறிவாற்றால் கொண்டவர்களாய் வளர்த்தெடுத்து, வாழ்க்கை பயணத்திற்கு வாழ்நாள் முழுவதும் வழிகாட்டும் கலங்கரை விளக்கே ஆசிரியர்கள். கல்வியுடன் இணைந்து உயரிய பண்பாட்டையும், அறநெறிகளையும், ஒழுக்கத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் மாணவ சமுதாயத்திற்கு கற்றுத்தரும் அறிவுப் பெற்றோராக விளங்கும் ஆசிரிய பெருமக்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக முதல்வர், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை தகைசால் பள்ளியாக அறிவித்து, உள்கட்டமைப்பு மேம்படுத்த ₹2.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட உள்ளது. பள்ளிக் கல்வித்துறை நபார்டு திட்டத்தின் மூலம், இப்பள்ளியில் 22 வகுப்பறைகள் கட்ட ₹4.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி பேசினார். தொடர்ந்து கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் துவக்கி வைத்தார். இம்முகாமில் கலந்து கொண்ட 21 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் மற்றும் சக்கர நாற்காலிகளை அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், சிஇஓ மகேஸ்வரி, டிஇஓ மணிமேகலை, டிஇஇஓ ஆனந்தன், நகர திமுக செயலாளர் நவாப், நகர்மன்ற தலைவர் பரிதா நவாப், துணைத்தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, வட்டார கல்வி அலுவலர்கள் செல்வராஜ், சீனிவாசன், தமிழ்செல்வி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மகேந்திரன், ரமேஷ், மலர்விழி, பிடிஏ தலைவர் கனல் சுப்பிரமணி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related posts

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்