27 குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அமைச்சர் உதயநிதி வழங்கினார்

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷசாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், நேற்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களிடம் அறிவுறுத்தினார்.

இதை தொடர்ந்து விஷசாராயம் குடித்து தம்பதி, உறவினர் என ஒரே பகுதியில் 25 பேருக்கு மேல் இறந்த கள்ளக்குறிச்சி, கருணாபுரத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அப்பகுதியில் உள்ள இறந்தவர்களின் 27 குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அப்போது பலியானவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர். அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரதீப் யாதவ், கலெக்டர் பிரசாத், வடக்குமண்டல ஐஜி நரேந்திரநாயர், எஸ்பி சதுர்வேதி, சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மாவட்ட சேர்மன் புவனேஸ்வரிபெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

* விஷ சாராயம் வந்தது எப்படி?
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்சுவது குடிசை தொழிலாக இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிக்கும் சாராய சப்ளை இருந்து வந்தது. இதையடுத்து போதைப் பொருட்களை தீவிரமாக ஒழிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டதன்பேரில் கல்வராயன்மலையில் சட்டம் ஒழுங்கு போலீசார், மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், தனிப்படை போலீசார் என மலையில் முகாமிட்டு தொடர் ரெய்டு செய்து சாராயம் காய்ச்சுதலை தீவிரமாக அழித்து வருகின்றனர்.

இதனால் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதியில் சாராய சப்ளை இல்லாததால் மெத்தனால் கலந்த விஷசாராயம் புழக்கத்தில் வந்தது. அதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதுச்சேரி, சென்னை, சேலம், தலைவாசல் போன்ற இடங்களில் இருந்து சப்ளையர்கள் மூலம் வீட்டிற்கே வந்து கொடுத்துவிட்டு செல்கின்றனர். குறைந்த விலைக்கு கிடைப்பதால் விற்பனையாளர்களும் வாங்கி விற்கின்றனர். மேலும் கூலித்தொழிலாளர்களும் குறைந்த விலைக்கு கிடைப்பதால் விஷ சாராயத்தை வாங்கி குடிக்கின்றனர். இப்படித்தான் மெத்தனால் கலந்த விஷ சாராயம் இப்பகுதியில் புழக்கத்தில் வந்துள்ளது என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

* புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கடத்தலா?
புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள், சாராயம் கடத்தி செல்வதும், அவ்வப்போது மதுவிலக்கு சோதனையில் பிடிபடுவதும் வழக்கமாக நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டு மரக்காணத்தில் விஷ சாராயம் அருந்தி 14 பேர் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணையில், புதுச்சேரியை சேர்ந்த ஏழுமலை என்பவர், சென்னையில் இருந்து, மெத்தனால் வாங்கி வந்து வில்லியனூரில் பதுக்கி வைத்திருந்தது, இதனை மரக்காணம் சாராய வியாபாரிகள் அமரன், முத்து ஆகியோர் வாங்கிச் சென்று மெத்தனாலை, சாராயத்தில் கலந்து விற்றதாகவும் கூறினர்.

இச்சம்பவம் அப்போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே கள்ளக்குறிச்சி கருணாபுரம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 43 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தமிழக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், புதுச்சேரியில் இருந்து சாராயத்தை கொண்டு வந்து மெத்தனால் கலந்து பாக்கெட்டில் அடைத்து வைத்து விற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சாராயத்தை எங்கிருந்து கொண்டு வந்தனர் என போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். புதுச்சேரியில் ஏற்கனவே சாராயக்கடைகளை அரசே நடத்துகிறது. ஆனால் இதற்கான ஆலையில் இருந்து முறைப்படி தயாரித்து கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

எனவே இந்த சாராயத்தை கடத்தி அதிக கிக் வேண்டும் என்பதற்காக, சாராயத்துடன் மெத்தனால் கலக்கப்பட்டிருக்கலாம் என தமிழக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து புதுச்சேரியில் உள்ள மெத்தனால் வியாபாரிகள், மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கு மெத்தனால் வாங்கும் நபர்கள் குறித்து தமிழக போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இதற்கிடையே புதுச்சேரி கலால்துறையும் விசாரணையில் குதித்துள்ளது, சாராயக்கடைகளின் இருப்பு விபரம், சப்ளை விபரம் ஆகியவற்றை சேகரித்துள்ளனர். கடந்த காலங்களில் போலி மதுபானம் தயாரித்த வழக்கில் கைதானவர்கள், தற்போது ஜாமீனில் இருப்பவர்கள் விவரங்களையும் சேகரித்து விசாரணை நடத்துகின்றனர்.

Related posts

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி