27 மீனவர்கள் சிறைபிடிப்பு இலங்கை கடற்படையை கண்டித்து இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 27 பேர் சிறை பிடிக்கப்பட்டதை கண்டித்து இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் மீனவர்கள் ஈடுபட உள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்றுமுன்தினம் காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்றனர். கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் பத்துக்கும் மேற்பட்ட படகுகளை வழிமறித்து நிறுத்தி விசாரணை நடத்தினர். பின்னர், தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் பாஸ்கரன் பெர்னாண்டோ, கென்னடி, சர்புதீன், பாம்பனை சேர்ந்த சந்தியா ஆகியோருக்கு சொந்தமான பெரிய மற்றும் சிறிய 4 படகுகளை, 23 மீனவர்களுடன் சிறைபிடித்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். மற்ற படகுகளை அங்கிருந்து அனுப்பி விட்டனர்.

இதுபோல் ஜெகதாபட்டினம் கடற்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் தீவுப்பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவரின் படகையும், அதிலிருந்த 4 மீனவர்களையும் சிறைபிடித்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு இரவோடு இரவாக அழைத்து சென்றனர். பின்னர் மீனவர்கள் அனைவரும் இலங்கை கடல் தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். இலங்கை கடற்படையின் சிறைபிடிப்பு நடவடிக்கையால் அச்சமடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் இரவு முழுவதும் கரையோரப் பகுதிகளில் மீன்பிடித்து நேற்று அதிகாலை கரை திரும்பினர். இதனால் மீன்பாடு மிகவும் குறைவாக இருந்தது.

இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல் நடவடிக்கைகளைக் கண்டித்தும், ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது என நேற்று நடந்த மீனவர் பிரதிநிதிகளின் அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அனைத்து விசைப்படகுகளும் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டன.

* பாம்பன் பாலத்தில் நாளை மறுநாள் மறியல்

ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மற்றும் படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, ராமேஸ்வரம் துறைமுகத்தில் மீனவர் பிரதிநிதிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு மீனவர் நலவாரிய உறுப்பினர் போஸ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், ‘‘பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 27 பேரையும், ஐந்து படகுகளையும் உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த நாட்களில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு இலங்கை நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த ஒன்பது படகுகளை மீட்டு கொண்டு வருவதற்கு இலங்கை செல்ல உரிய அனுமதியை ஒன்றிய வெளியுறவுத்துறை விரைவாக வழங்க வேண்டும்’’ உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை மறுநாள் (அக். 18) பாம்பன் சாலைப் பாலத்தில் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு