27 முதல் 5ம் தேதி வரை பிரமோற்சவம் திருப்பதியில் இலவச தரிசன பக்தர்களுக்கு முன்னுரிமை

திருமலை: திருப்பதியில் பிரமோற்சவத்தின் போது இலவச தரிசனத்தில் பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மாடவீதியில் சுவாமி வீதி உலாவுடன் வரும் 27ம் தேதி முதல் 5ம் தேதி வரை பிரமோற்சவம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது. கடந்த காலங்களில் கொரோனாவால் கோயிலுக்குள் 2 பிரமோற்சவங்கள் பக்தர்களின்றி நடத்தப்பட்டது. இந்தாண்டு பிரமோற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் வர வாய்ப்புள்ளதால் இலவச தரிசனத்தில் பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளது. அனைத்து வகையான சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.விஐபி தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், 1 வயது குழந்தைகளுடன் பெற்றோர்களுக்கான சிறப்பு தரிசனம் போன்ற அனைத்து முன்னுரிமை தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள், ஸ்ரீவாணி அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள் மற்றும் பிற அறக்கட்டளைகளின் நன்கொடையாளர்களுக்கான தரிசன டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. புரோட்டோகால் மக்கள் பிரதிநிதிகளுக்கு, அதிகாரிகளுக்கு மட்டும் விஐபி தரிசனம்  இருக்கும்.50 சதவீத அறைகள் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.  மீதமுள்ள அறைகள் திருமலையில் உள்ள பல்வேறு கவுண்டர்களில் நேரடியாக வரும் பக்தர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன. அக்டோபர் 1ம் தேதி கருட சேவை என்பதால் பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு அறக்கட்டளைகளின் நன்கொடையாளர்கள் மற்றும் ஓய்வறை கட்டிய நன்கொடையாளர்களுக்கு செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை ஆன்லைனில் அல்லது ஆப்லைனில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்படாது. நன்கொடையாளர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். புரட்டாசி மாதத்தில் பிரமோற்சவம் நடைபெறுவதால் அதிகளவில் பக்தர்கள் வர வாய்ப்புள்ளதால் அறைகள் கிடைப்பது குறைவாக இருக்கும். எனவே, பக்தர்களை இதை கவனித்தில் கொண்டு திருப்பதியில் தங்கும் விதமாக அறைகள் பெற்று கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது….

Related posts

கர்நாடக மாநிலத்தில் கடந்த 15 மாதங்களில் 1,182 விவசாயிகள் தற்கொலை

கேரளாவின் வயநாடு பகுதியில் மாற்றுமுறை மருத்துவத்திற்கு சென்றதால் 3 வயது சிறுவன் உயிரிழப்பு: தந்தை, சிகிச்சையளித்த நபர் கைது

ஜம்மு -காஷ்மீரில் ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்