26 குற்றச்சாட்டுகளுக்கு பிஜிஆர் நிறுவனம் விளக்கம் பொய் குற்றச்சாட்டுகளை பரப்பும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை: இந்திய பங்குச்சந்தைகளின் ஒழுங்காற்று மையத்திற்கு கடிதம்

சென்னை: பிஜிஆர் எனர்ஜி நிறுவனம் தன் மீதான 26 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்து, இந்திய பங்குச்சந்தைகளின் ஒழுங்காற்று மையமான செபிக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக தமிழக அரசு, பிஜிஆர் எனர்ஜி என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் ரூ.355 கோடி நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்திடம், எண்ணூர் அனல் மின்நிலைய திட்ட விரிவாக்கத்திற்கு, முறைகேடாக ரூ.4,472 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்ததாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.இந்நிலையில், பிஜிஆர் எனர்ஜி நிறுவனம் தங்களது நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளித்து இந்திய பங்குச்சந்தைகளின் ஒழுங்காற்று மையமான செபிக்கு கடிதம் எழுதியுள்ளது. மொத்தம் 26 குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பிஜிஆர் நிறுவனம் செபிக்கு விளக்கமளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டத்துக்கான ஏலம் கடந்த 2018ம் ஆண்டில் விடப்பட்டது. 10 சதவீதம் பாதுகாப்பு வைப்புத்தொகை வரவு வைக்கப்பட்டு, பணியை தொடங்க இருந்த நேரத்தில் கொரோனாவால் அது தள்ளிப்போனது. இதனிடையே, ஒன்றிய அரசின் ஆத்மநிர்பார் திட்டத்தின்படி, மொத்த ஒப்பந்த மதிப்பில், வங்கி உத்தரவாதம் 10 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதனடிப்படையில், தங்களது நிறுவனத்துக்கும் சலுகைகள் கோரிய நிலையில், ஒப்பந்தத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரத்து செய்தது. தொடர்ந்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும், அச்சலுகைகள் கிடைக்க பெற்றது. அந்த சலுகைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தருவதாக உறுதியளித்த பின்னர் நீதிமன்ற வழக்கு திரும்பப் பெறப்பட்டது. பிஜிஆர் நிறுவனம் ஒரு பேப்பர் கம்பெனி குற்றம்சாட்டிய நிலையில், தங்களது நிறுவனத்தில் நேரடியாக 1400 வேலையாட்களும், மறைமுகமாக 2000க்கும் அதிகமானோரும் பயன்பெறுகின்றனர். மேலும், நாடு முழுவதும் 4 உற்பத்தி நிலையங்களும், சுமார் 30க்கும் அதிகமான பிராஜெக்ட்டுகளும் இருக்கிறது. இதுவரை எந்த பணியையும் காலதாமதமாக செய்யவில்லை.சேமிப்பு தொகை ரூ.38 கோடி மட்டுமே என்று குற்றம்சாட்டப்பட்ட நிலையில், பிஜிஆர் நிறுவனம், 2020-21 நிதியாண்டில் மட்டும் ரூ.467 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. தற்போதைய நேர்மறை நிகர மதிப்பு ரூ.950 கோடி ஆகும். பிஜிஆர் நிறுவனம் சார்பில் மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவது மட்டுமே எங்களின் பணி, மின்சார வினியோகம் செய்வதில்லை. எங்கள் நிறுவனம் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை