2,500 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக உள்ள மஞ்சள் கொத்து

பெரம்பலூர்: பொங்கல் பண்டிகை என்றாலே செங்கரும்பும், மஞ்சள் கொத்தும் தான் நினைவுக்கு வரும். பொங்கல் பானைகளில் மஞ்சள் கொத்து கட்டி பொங்கல் வைப்பது வழக்கம். டெல்டா மாவட்டங்களில் செங்கரும்பு, மஞ்சள் சாகுபடி ெசய்யப்பட்டுள்ளது. பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் மஞ்சள் அறுவடைக்கு தயாராக உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் அரும்பாவூர், விசுவக்குடி, தொண்டமாந்துறை, அன்னமங்கலம், முகமதுபட்டினம், பூஞ்சோலை உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 2,000 ஏக்கரில் விவசாயிகள் வயல்களில் மஞ்சள் கொத்துகள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள மஞ்சள் கொத்துகள் தற்போது நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே மருங்கூரணி கிராமத்தில் தைப்பொங்கலுக்கு தேவையான மஞ்சள் செடிகள் அமோக விளைச்சலில் உள்ளது. இதேபோல் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட மகளிப்பட்டி, புனவாசிப்பட்டி, லட்சுமணம்பட்டி, புதுப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். இந்த இரு மாவட்டங்களிலும் சுமார் 500 ஏக்கரில் மஞ்சள் சாகுபடி நடந்துள்ளது. மழையால் மஞ்சள் செழித்து வளர்ந்துள்ளது. தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நாங்கள் ஆண்டுதோறும் மஞ்சள் கொத்துகள் சாகுபடி செய்து வருகிறோம். பொங்கல் பண்டிகைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு அறுவடை செய்து சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்வோம். வியாபாரிகளும் எங்களிடம் நேரடியாக மஞ்சள் மொத்தமாக வாங்கி சென்று விற்பனை செய்வார்கள். தற்போது மஞ்சள் கொத்து ெசழுமையாக வளர்ந்துள்ளதால் நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஒரு ஜோடி மஞ்சள் ரூ.25 முதல் ரூ.50 வரை விற்பனையாகும். ஒரு ஏக்கர் மஞ்சள் சாகுபடி செய்தால் ரூ.1லட்சம் வரை விலை போகும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொங்கலுக்கு மஞ்சள் கொத்துகள் முறையாக விற்பனை செய்ய முடியாத சூழ்நிலையில் இந்தாண்டு ஓரளவு வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்….

Related posts

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: உயிரிழப்பு 4ஆக உயர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வில் 75 செ.மீ. ஆழத்தில் இரும்பிலான கலப்பையின் கொழுமுனை கண்டெடுப்பு!!

அரசு மருத்துவமனைக்குள் வெளிவாகனங்கள் நிறுத்த தடை விதிப்பு