234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்

சென்னை: சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றும், நடைபெற இருக்கின்ற தேர்தல் ஜனநாயக போர் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர்களின் பட்டியலை நேற்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தொடர்ந்து, அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:திமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் பட்டியலை உங்கள் முன்னால் வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். கொள்கை நட்பால் உருவான கூட்டணி சார்பில் தொகுதிகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. அதன் பிறகு என்னென்ன தொகுதிகள் என்பது அடையாளம் காணப்பட்டது. இத்தகைய பணிகள் நேற்றுடன் (நேற்று முன்தினம்) முடிவடைந்துள்ளது. அந்த அடிப்படையில் தமிழக சட்டப்பேரவையில் 234 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் 173 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். 61 தொகுதிகளில் தோழமை கட்சிகளுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.மொத்தமுள்ள 234 தொகுதிகளில்  திமுக 173 தொகுதி, காங்கிரஸ் 25, மதிமுக 6, மார்க்சிஸ்ட் 6, இந்திய கம்யூனிஸ்ட் 6, விடுதலை சிறுத்தைகள் கட்சி 6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 3, மனித நேய மக்கள் கட்சி 2, தமிழக வாழ்வுரிமை கட்சி 1, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி 1, ஆதித்தமிழர் பேரவை 1, மக்கள் விடுதலை கட்சி 1 தொகுதி என ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சியில் ஒரு இடம், தமிழக வாழ்வுரிமை கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி ஆகியவை திமுகவின் வெற்றி சின்னமாம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். அதன் அடிப்படையில் உதயசூரியன் சின்னத்தில் 187 தொகுதிகளில் களம் காண்கிறது. நான் அறிவித்தது வேட்பாளர் பட்டியல் மட்டுமல்ல. வெற்றி பெறுவோரின் பட்டியல் அதுதான் முக்கியம். 1971 தேர்தலில் 184 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்று மகத்தான சாதனை படைத்தார் கலைஞர். அந்த சாதனையை இதுவரைக்கும் தமிழகத்தில் யாரும் சாதிக்கவில்லை. வரப்போகிற தேர்தலில் திமுக சாதனையை திமுகதான் வெல்லும். 187 வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். அனைவரும் வெற்றி பெறுவார்கள் அதே மாதிரி தோழமை கட்சிகளோடு போட்டியிடுகின்ற 234 தொகுகளிலும் வெல்ல போகிறார்கள் என்பது உண்மை. அதை நிரூபித்து காட்ட போகிறோம். 234 தொகுதிகளிலும் திமுக நிற்கிறது என்று அனைவரும் நினைக்க வேண்டும். திமுகவினருக்கு நான் சொல்ல விரும்புவது. இதில் போட்டியிடுவது நமது தலைவர் கலைஞர். அதை மனதில் வைக்க வேண்டும். திமுக ஆட்சி அமைப்போம் என்று ஒரே சிந்தனையோடு இருக்க வேண்டும்.நடக்கவிருக்கின்ற ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல ஜனநாயக போர். இந்த போரில் மக்களுடன் இணைந்து ஊடகங்களும் தங்களுடைய நெறிமுறைகளோடு செயல்பட்டு தமிழகத்தின் எதிர்காலத்திற்கு உங்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். வேட்பாளர் பட்டியலில் 13 பெண்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் அடிமையாக இருக்கும் ஆட்சி, இதை ஆட்டி படைக்கின்ற பிஜேபி ஆட்சிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். திமுக தேர்தல் அறிக்கை நாளை (இன்று) மாலைக்குள் வெளியிடப்படும். அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் வேட்புமனு தாக்கல் செய்வார்கள். நான் 15ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

குமரியில் 1,144 ஹெக்டேரில் அணுக் கனிம சுரங்கம் அமைக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் : வேல்முருகன்

ஆட்சியில் பங்கு கேட்கும் சூழலே எழவில்லை: திருமாவளவன் பேட்டி

ஆட்சியை காப்பாற்றவே பாஜவுடன் இபிஎஸ் கூட்டணி: அதிமுக அவைத்தலைவர் பேச்சு