23ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் அதிமுகவை கைப்பற்ற எடப்பாடி திட்டம்; ஆதரவாளர்களை திரட்டி களமிறங்க ஓபிஎஸ் முடிவு

சென்னை: அதிமுக பொதுக்குழு வருகிற 23ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதுகுறித்து விவாதிக்க தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில், அதிமுகவை வழிநடத்த ஒற்றை தலைமைதான் தேவை என்று முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதனால், பொதுக்குழுவில் அதிமுகவை முழுமையாக எடப்பாடி கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை கேட்டு ஓபிஎஸ் கடும் அப்செட்டில் உள்ளார். எனவே, தானும் களம் இறங்க, தனது ஆதரவு முக்கிய நிர்வாகிகளுடன் அவர் தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த இரண்டு வாரத்துக்கு முன் நடந்த கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன் தமிழக பாஜவை நேரடியாகவே குற்றம் சாட்டி பேசினார். அப்போது, \”தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களை பிடித்து பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுகிறது. ஆனால் ஏதோ ஒரு நூறு பேரை வைத்து போராட்டம் நடத்தினால் தமிழகத்தில் பாஜ பிரதான எதிர்க்கட்சியாக மாற முடியாது\” என்றார். அவரது பேச்சுக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையால் நாளுக்கு நாள் அதிமுக உட்கட்சி மோதல் பூதாகரமாகி உள்ளது. மேலும், ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே கருத்து ஒற்றுமை இல்லாத சூழ்நிலையால் தேர்தலில் அதிமுகவுக்கு தொடர் தோல்வி ஏற்பட்டு வருகிறது. இதனால், அதிமுகவை வழிநடத்த ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால், ஒற்றை தலைமை என்பது ஓ.பன்னீர்செல்வமா, எடப்பாடி பழனிசாமியா என்ற நிலை கட்சிக்குள் பூதாகரமாகி வந்தது. இந்நிலையில்தான், எடப்பாடி பழனிசாமி கட்சியில் தனது ஆதரவாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்து வந்தார். தனக்கு எதிராக உள்ள கட்சி நிர்வாகிகளையும் சரிகட்டி, தனது ஆதரவாளராக மாற்றினார்.இதனால் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து வந்தது. ஆனாலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் பதவியில் ஓபிஎஸ் இருப்பதால், தனது கையெழுத்து இல்லாமல் எதுவும் நடக்காது என்றும் அவர் கருதினார். இதற்கிடையே, இரு நாட்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டு, உட்கட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடந்துள்ளது. இதற்கு வருகிற 23ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்று, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும். இதனால், எம்ஜிஆர் காலம் முதல் முன்னாள் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்களை சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக்குழுவுக்கு அழைப்பது வழக்கம். தற்போது பொதுக்குழு நடைபெறும் திருமண மண்டபத்தில் இடம் காணாது. 1700 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால் பொதுக்குழு உறுப்பினர்களே 2500 பேர் உள்ளனர். இதனால் சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம். இதுகுறித்து மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களை அழைத்துபேசி முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய ஓ.பன்னீர்செல்வமும் கூட்டத்தை நடத்த ஒப்புக் கொண்டார். அதன்படி, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எவ்வாறு நடத்தலாம் என்பதும் குறித்தும், என்னென்ன தீர்மானங்களை கொண்டு வரலாம் என்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தி முடிவு செய்ய சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலையில் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்க, அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கூட்டம் கட்சி அலுவலகத்தின் முதல் மாடியில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக நிர்வாகிகள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கூட்டத்தில் பேசிய விஷயங்கள் வெளியில் தெரிந்துவிடாமல் இருக்கவும், அங்கு பேசுகிறவர்களின் பேச்சுக்களை ரெக்கார்டு பண்ணி வெளியில் தெரிவித்துவிடாமல் இருக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம், மாலை 3.30 மணி வரை நடந்தது. சுமார் 4 மணி நேரம் 30 நிமிடம் நடந்த கூட்டத்தில் விவாதங்கள் அனல் பறந்தன. கூட்டம் தொடங்கியதும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி வரவேற்றார். பின்னர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, சிறப்பு அழைப்பாளர்களை பொதுக்குழுவுக்கு அழைக்க வாய்ப்பு இல்லை. இடம் பற்றாக்குறை உள்ளது. இதனால் அதுகுறித்து கருத்து தெரிவிக்கத்தான் அழைத்துள்ளோம் என்றார். இது குறித்து நிர்வாகிகள் கருத்து தெரிவிக்கலாம் என்றார். பின்னர் அவரே, முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தியை பார்த்து, நீங்கள் பேசலாம் என்றார். அவர் எழுந்தவுடன், ‘கட்சிக்கு ஒற்றை தலைமை இல்லாததால்தான் தொடர் தோல்விகள் ஏற்படுகின்றன. இதனால் ஒற்றை தலைமை வேண்டும். கட்சியை கட்டுக்கோப்பாக நடத்துகிறவர் எடப்பாடி பழனிசாமிதான். ஆற்றல் மிக்கவர். திறமையானவர். எல்லோரையும் அனுசரித்து செல்கிறவர். அவர் தலைமையில் கட்சி செயல்பட்டால்தான் நல்லது என்றார். அவரை தொடர்ந்து, வரிசையாக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், விஜயபாஸ்கர், உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தளவாய் சுந்தரம், வளர்மதி, கோகுல இந்திரா என பலரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேசினர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பெரம்பலூர் ராமச்சந்திரன், வேளச்சேரி அசோக், முன்னாள் அமைச்சர் மோகன் உள்ளிட்ட சிலர், ஒற்றை தலைமை வேண்டும். ஆனால் அது எடப்பாடி பழனிசாமியா, ஓ.பன்னீர்செல்வமா என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும் என்று இருவருக்கும் ஆதரவாகவே பேசினர். ஒரு சிலரை தவிர பெரும்பாலானவர்கள் எடப்பாடிக்கு ஆதரவாக பேசினர். திட்டமிட்டு, தன்னை ஓரங்கட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த கூட்டத்தை நம் மூலமாகவே நடத்த வைத்து, அவமானப்படுத்தி விட்டனர் என்று ஓ.பன்னீர்செல்வம் கருதினார். அவர் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. ஆனாலும் எடப்பாடி ஆதரவாளர்கள் பலரும் தங்கள் கருத்தை தெரிவித்தபடி இருந்தனர்.ஒரு கட்டத்தில் வழிகாட்டு குழு உறுப்பினர் ஜெ.சி.டி.பிரபாகர் எழுந்து, இந்த கூட்டம் பொதுக்குழுவை பற்றித்தான் பேச கூட்டப்பட்டது. தலைமை குறித்து அல்ல. மேலும் கட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. அதற்கு ஒப்புதல் பெறத்தான் பொதுக்குழு கூட்டப்படுகிறது. அப்படி இருக்கும்போது இந்த விவாதம் தேவையா என்றார். அப்போது, சிலர் கூச்சல் போட்டனர். அவர்களை வைத்திலிங்கம் பேசாமல் இருங்கள். அவரது கருத்தை அவர் தெரிவிக்கிறார் என்றார். பின்னர் அவரே, பாஜவால்தான் நாம் தோற்றோம். சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்கவில்லை. நபிகள் குறித்து நுபுர் சர்மா பேசியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. பாஜவை விமர்சிக்க நமக்கு தெம்பும், திராணியும் இல்லை என்கின்றனர். இதற்கெல்லாம் நாம் பதில் அளிக்க வேண்டும். அறிக்கை வெளியிட வேண்டும். பொதுக்குழுவில் பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்க வேண்டும். எம்ஜிஆர் காலத்தில் இருந்து கடைபிடிக்கப்படும் மரபை நாம் மாற்றக் கூடாது என்றார். அப்போது தங்கமணி எழுந்து, பாஜவுடன் இணைந்து ஒரு தேர்தலில்தான் போட்டியிட்டு தோல்வி அடைந்தோம். அடுத்த தேர்தலையும் அவர்களுடன்தான் சந்திக்கப் போகிறோம் என்றார். பின்னர் மீண்டும் பொன்னையன் உள்ளிட்ட சிலர் எடப்பாடிக்கு ஆதரவாக பேசினர். கூட்டம் வேறு திசையை நோக்கி செல்வதால், பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டம் இத்துடன் முடிந்தது என்று கூறி கூட்டத்தை வைத்திலிங்கம் முடித்து வைத்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் நோக்கம் முடிந்து விட்டதால் அவரது ஆதரவாளர்கள் சந்தோஷத்துடன் புறப்பட்டனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம், தன்னை நம்ப வைத்து கூட்டத்தை நடத்தி, சிக்க வைத்து விட்டனர் என்று கருதினார். இதனால் கூட்டம் முடிந்த பிறகு தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார். இதனால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டம் முடிந்த பிறகு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: இந்த ஆலோசனையில் ‘பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஒற்றை தலைமை தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார்கள். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகளின் கோரிக்கை குறித்து விவாதிக்கப்படும்  என்றார்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்