22 ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் கிடக்கும் அவலம் கையகப்படுத்தப்பட்ட 2,200 ஏக்கர் நிலங்களை மீண்டும் வழங்க வேண்டும்

கடலூர் அருகே தொழிற்சாலை அமைப்பதற்காக கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்ட 2,200 ஏக்கர் விலை நிலங்கள் பயன்பாடு இல்லாமல் தொழிற்சாலைகள் அமைக்கப்படாமல் உள்ள நிலையில் மீண்டும் தங்களிடமே வழங்க வேண்டும் என 25 கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.கடலூர் அருகே சிப்காட் தொழிற்பேட்டை 3 பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியில் கடந்த 1999 ஆம் ஆண்டு பகுதி மக்களின் வளர்ச்சிக்காகவும், கடலூர் மாவட்டத்தில் தொழிற்சாலை மேம்பாட்டுதலுக்காகவும், தொழிற்சாலை அமைப்பதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன்படி கடலூர் அருகே உள்ள காயல்பட்டு, திருச்சோபுரம் ,வாண்டியம்பாளையம், தியாகவல்லி, ஆண்டார் முள்ளி பள்ளம் உள்ளிட்ட கிராம பஞ்சாயத்துகளில் இருந்து 25 கிராம மக்களிடம் சுமார் 2,200 ஏக்கர் விலை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.சம்பந்தப்பட்ட விலை நிலத்தில் தொழிற்சாலைகள் அமைக்கப்பெற்றவுடன் தங்களது வாழ்வாதாரம் மேம்பாடு அடையும் என எடுத்துரைக்கப்பட்ட உறுதியின் அடிப்படையில் கிராம மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் ஆட்சி மாற்றம் கண்டதும் திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு இடர்பாடுகளால் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை அமைக்கும் நிறுவனம் திட்டத்தை செயல்படுத்தாமல் 22 ஆண்டுகளாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தையும் பயன்பாடு அற்ற நிலையில் கிடப்பில் போட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான கிராம மக்களின் வாழ்வாதாரம் செழிக்கும் என எதிர்பார்த்த நிலையில் கானல்நீராக போனது.இதைத் தொடர்ந்து கிராம மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இக்கால தலைமுறை மற்றும் வருங்கால தலைமுறைக்கு பயனுள்ள வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே 22 ஆண்டு காலமாக தங்களது பகுதி வளர்ச்சியும் காணாமல், வளத்தையும் கொடுக்காமல் கையகப்படுத்த நிலமும் பயனற்ற நிலையில் கிடப்பது தொடர்பாக தமிழக மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வகையில் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்துள்ளனர். இதன் அடிப்படையில் கூட்டமைப்பை உருவாக்கி தீர்வு காணவும் முடிவு செய்துள்ளனர்.ஒன்று திரண்ட கிராம மக்கள்கடலூர் அருகே ஆண்டார்முள்ளி பள்ளம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளின் 25 கிராம மக்கள் இது தொடர்பாக பூச்சிமேடு கிராமத்தில் ஒன்று திரண்டு ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அப்போது இது தொடர்பாக தமிழக அரசு மீண்டும் கையகப்படுத்தப்பட்ட நிலம் தங்களிடம் ஒப்படைத்து வாழ்வாதாரத்துக்கு வழிகாட்ட வேண்டும் என எடுத்துரைத்து ஜிஆர் துரைராஜ் கூறினார். அவர் மேலும் கூறுகையில், கடலூர் மாவட்டம் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் என தமிழக அரசு செயல்பட்டு வருவது மிக்க மகிழ்ச்சி. அதற்கேற்ற வகையில் தற்போது 22 ஆண்டு காலமாக கிடப்பிலுள்ள திட்ட செயல்பாடுகள் ஏதும் இல்லாத நிலைப்பாட்டில் உள்ள எங்கள் பகுதியை கருத்தில் கொண்டு மக்களின் வாழ்வாதாரத்துக்கு வளம் சேர்க்க வழி காண வேண்டும். 22 ஆண்டு காலமாக இப்பகுதியில் உள்ள 476 குடும்பங்களில் சுமார் 2200 விலை நிலங்கள் தொழிற்சாலை திட்டத்திற்காக கையகப்படுத்தி உள்ள நிலையில் எந்த விதமான பயன்பாடும் இல்லாமல் உள்ளது. இதனால் இந்த பகுதி இளைஞர்கள் முதற்கொண்டு அனைவரும் வேலை வாய்ப்பு இல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். எனவே திட்டத்தை செயல்படுத்த சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வலியுறுத்த வேண்டும். இல்லை என்றால் கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களை மீண்டும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம் விவசாயம் செய்து மீண்டும் எங்கள் பகுதி குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வர். இதனை எடுத்துரைக்க நிலம் கொடுத்துள்ளவர்கள் ஒன்று திரண்டு உள்ளோம் என்றார்.தொழிற்சாலை திட்டம் தொடங்கப்படுமா?சம்பந்தப்பட்ட பகுதியில் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் 22 ஆண்டுகளாக தொழிற்சாலைகள் ஏதும் தொடங்கப்படாமல் உள்ளது. பல்வேறு குளறுபடி மற்றும் இயற்கை பேரிடர் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களை சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் ஒரு தரப்பு தெரிவிக்கின்றது. இதுகுறித்து தமிழக அரசு தற்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கிராம மக்களின் கோரிக்கையும் வலுவாக ஒலிக்கிறது. இதன் அடிப்படையில் விரைவில் இப்பகுதியில் தொழிற்சாலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரமும் ஒளிரும் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் கிராம மக்கள்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்