2030ல் காற்று மாசு அளவு 27% அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்

சென்னை: முன்னுரிமை அடிப்படையில் காற்று மாசை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், 2030ம் ஆண்டில் சென்னையில் நுண்துகள் மாசின் வெளியேற்றம் 27% அதிகரிக்கும் தகவல் தெரியவந்துள்ளது. இந்திய அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்விற்கான மையம் பெங்களூரில் ஆகஸ்ட் 23-25 வரை நடத்திய மாசற்ற காற்றுக்கான மாநாட்டில் பல்வேறு தரவுகள் வெளியாகி உள்ளது. அதில், 2019-20ம் ஆண்டில், சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் வெளியேற்றப்படும் மாசு தொடர்பான விவரப்பட்டியலின் அடிப்படையில் ஆய்வு ஒன்றை பெங்களூரு தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்விற்கான
மையம் மேற்கொண்டது.

இந்த ஆய்வில் அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட கனரக தொழிற்சாலைகள் இருப்பதால், தூத்துக்குடியில் நுண்துகள் மாசின் வெளியேற்றம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 76 நகரங்களுக்கான பட்டியலை அந்த மையம் தயாரித்துள்ளது. இந்த ஆய்வின்படி, சென்னையின் மாசு வெளியேற்றம் தூத்துக்குடியை விட கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த மாசைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்காமல் தற்போது உள்ளபடியே தொழிற் நடவடிக்கைகளை இயக்கினால், 2030ம் ஆண்டில் சென்னையில் அதிகபட்சமாக 27 விழுக்காடும், திருச்சியில் 25 விழுக்காடும், மதுரையில் 20 விழுக்காடும், தூத்துக்குடியில் 16 விழுக்காடும் மாசு வெளியேற்றம் இருக்கும் என்று ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

முன்னுரிமை அடிப்படையில் காற்று மாசைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் 2030க்குள் மாசு வெளியேற்றத்தின் அளவை தற்போதுள்ள நிலையிலிருந்து திருச்சியில் 36 விழுக்காடும், மதுரையில் 27 விழுக்காடும், சென்னையில் 27 விழுக்காடும், தூத்துக்குடியில் 20 விழுக்காடும் குறைக்க முடியும் என இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்துப் பேசிய தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் எத்திராஜன் கூறுகையில்: சென்னை, மதுரை, திருச்சி, துாத்துக்குடி போன்ற நகரங்களில், காற்றின் தரத்தை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள காற்று மாசு அதிகமாக இருக்கும் நகரங்களில் pm10 காற்று மாசு நுண்துகள் அளவை ஆராய்ந்து வருகிறோம். இந்த இயக்கவியல் பற்றிய விரிவான புரிதலை நிறுவுவதும், மாசற்ற காற்றுக்கான பயனுள்ள உத்திகளை உருவாக்குவதும் எங்கள் குறிக்கோள் என்றார்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது