2024ம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருது, பரிசுத்தொகை

அரியலூர், ஜூலை 12: அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் வளர்ச்சித் துறையில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களின் தமிழ்த் தொண்டினை பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் ‘தமிழ்ச் செம்மல்’ என்ற விருது ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தெரிவு செய்து அவர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருதும், ரூ.25,000 பரிசுத் தொகையும், தகுதியுரையும் 2015ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. எனவே மாவட்டங்களில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களிடமிருந்து தன்விவரக் குறிப்புகளுடன் விண்ணப்பங்களைப் பெற்று அதில் தகுதியானவர்களின் விண்ணப்பங்களை தொகுத்து அனுப்புமாறு சென்னைத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் தெரிவித்துள்ளார். எனவே 2024ம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு அரியலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்திலிருந்து விண்ணப்பங்களை (www.tamilvalarchithurai.com < http://www.tamilvalarchithurai.com/ >) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிப்பவர்கள் தன்விவரக் குறிப்புடன்(இரண்டு நகல்) இரண்டு நிழற்படம், அவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணி ஆகிய விவரங்களுடன் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இரண்டாம் தளம், அறை எண்.226ல் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 8 ஆம் நாளுக்குள் அளிக்கப்பட வேண்டும். மேலும் தமிழ்ச் செம்மல் விருது வேண்டுவோர் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் விருதுகள் ஏதும் இதற்கு முன் பெற்றிருக்கக் கூடாது. அகவை முதிர்ந்த தமிழறிஞர், எல்லைக் காவலர், தமிழறிஞர் நிதியுதவி பெற்று வருபவராக இருக்கக் கூடாது. என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Related posts

நெல்லை- சென்னை வந்தே பாரத்துக்கு திருச்செந்தூரில் இருந்து இணைப்பு ரயில் நாசரேத் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்

உடன்குடியில் நாளை வருமுன் காப்போம் திட்ட முகாம்

வேப்பங்காடு பள்ளி ஆண்டுவிழா