சென்னை : தமிழ்நாடு சிலம்ப கழகம் சார்பில், யுனிவர்சல் அச்சிவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் பியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இணைந்து, உலக வரைபடத்தில் 2023 மாணவ, மாணவிகள் மற்றும் சிலம்ப ஆசான்கள் கலந்துகொண்டு சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சி குன்றத்தூர் அருகில் உள்ள கோவூர் தண்டலம் மாதா மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு சிலம்ப கழக தலைவர் சி.எம்.சாமி தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் கலைமுதுமணி முருகக்கனி, கோபால், காவல்துறை உதவி ஆணையர்கள் காந்த், ஆதிமூலம், ஒருங்கிணைப்பாளர் கோ.உதயசூரியன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு சிலம்ப கழக பொதுச்செயலாளர் சிலம்ப ஜாம்பவான் ஞானம் வரவேற்றார்.
சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்க தலைவர் என்.ஆர்.தனபாலன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து வீரர்களை உற்சாகப்படுத்தி பேசினார். மாணவ, மாணவிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஆ.மனோகரன் பதக்கங்களை வழங்கினார். தென்சென்னை கிழக்கு மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் என்.டி.மோகன், சிலம்ப ஆசான்களுக்கு சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில், மலேசியா சாண்டோ ரத்தினம், ஆந்திரா-தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் துரை, குன்றத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வந்தே மாதரம், கோவூர் ஊராட்சி தலைவர் சுதாகர், தண்டலம் கே.அரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சிலம்பக்கழக பொருளாளர் ஜெ.ஈசன் நன்றி கூறினார்.