2021-22ம் ஆண்டில் தமிழக அரசின் கடன் சுமை ரூ.5,77,987 கோடியாக இருக்கும்

சென்னை: தமிழக அரசு 2021-2022ம் ஆண்டு ரூ.92,484.50 கோடி கடன் பெற திட்டமிட்டுள்ளதாகவும், இதன்மூலம் தமிழக அரசின் மொத்த கடன் ரூ.5,77,987 கோடியாக இருக்கும் என்று நிதி அமைச்சர் கூறினார்.இதுகுறித்து 2021-2022ம் ஆண்டு பொது பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:* இடைக்கால வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் 2,18,991.96 கோடி ரூபாயாக உள்ள ஒட்டுமொத்த வரி வருவாய் மதிப்பீடுகளை, 2021-22ம் ஆண்டு திருத்த வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் 2,02,495.89 கோடி ரூபாயாக குறைக்கப்படும். * மொத்த வருவாய் வரவுகளில், மாநில அரசின் சொந்த வரி வருவாய் பெரும்பகுதியாக உள்ளது. இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1,35,641.78 கோடி ரூபாயாக இருந்த மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மதிப்பீடுகள், 2021-22ம் ஆண்டு திருத்த வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் 1,26,644.15 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. * 2021-22ம் ஆண்டு திருத்த வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் 14,139.01 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள வரி அல்லாத வருவாய், கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக, 2021-22ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளை காட்டிலும் சற்று குறைவாக உள்ளது.* 2021-22ம் ஆண்டு திருத்த வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில், ஒட்டுமொத்த வருவாய் செலவினங்கள் 2,61,188.57 கோடி ரூபாயாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. * கோவிட்-19 பெருந்தொற்றின் அடுத்தடுத்த அலைகளின் தாக்கத்தில் இருந்து மாநிலத்தின் பொருளாதாரம் இன்னும் முழுமையாக மீண்டு வராத காரணத்தால், நிதி சீரமைப்பு செய்வதற்கான காலம் இன்னும் வரவில்லை.  எனவே, 2021-22ம் ஆண்டில் இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் 41,417.30 கோடி ரூபாயாக இருக்கும் என தவறாக கணிக்கப்பட்ட வருவாய் பற்றாக்குறை, 2021-22ம் ஆண்டு திருத்த வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில், உண்மையில் 58,692.68 கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற அசாதாரணமான காலத்தின் காரணமாக, வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது எனவும், இனிவரும் காலங்களில், நிதி ஒழுக்கம் மற்றும் நிதி ஒருங்கிணைப்பில், இந்த அரசின் உறுதியை எள்ளளவும் பாதிக்காது என்பதையும் உறுப்பினர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். * மூலதன செலவினங்களுக்காக இடைக்கால வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 43,170.61 கோடி ரூபாய் திருத்த வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் 42,180.97 என குறைக்கப்பட்டுள்ளது.* 2021-22ம் ஆண்டு திருத்த வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் நிதி பற்றாக்குறை 92,529.43 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.* 2021-22ம் ஆண்டிற்கு நிதி பற்றாக்குறை, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.33 சதவீதம் என, 15வது நிதி குழுவால் வரையறுக்கப்பட்ட ஒட்டு மொத்த விதிகளுக்குள் நிதி பற்றாக்குறை கட்டுப்படுத்தப்படும். * வெள்ளை அறிக்கையின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு, 2006-07ம் ஆண்டில் 8.48 சதவீதமாக இருந்த தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வரி விகிதம் 2020-21ம் ஆண்டில் வெறும் 5.46 சதவீதம் என 3.02 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதுள்ள மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில், இது சுமார் 65,000 கோடி ரூபாய்க்கும் மேலான வருவாய் இழப்பை குறிக்கிறது.  இது இந்த மாநிலத்தால் சரி செய்ய வேண்டிய இழப்பாகும்.* தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி உள்ளிட்ட பழைய வரிகளில் நிலுவையில் உள்ள 28,000 கோடி ரூபாயை வசூலிக்க எளிமையாக, அரசிற்கு பலனளிக்கக்கூடிய விதமாக “சமாதான் திட்டம்” அறிவிக்கப்படும்.  * 2021-22ம் ஆண்டில் மாநில அரசு ரூ.92,484.50 கோடி அளவிற்கு நிகர கடன் பெற திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சரக்குகள் மற்றும் சேவைவரி இழப்பீட்டிற்கு ஈடாக மத்திய அரசால் வழங்கப்பெறும் ரூ.8,095 கோடி அடங்காது. 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையிலான நிலுவை கடன், 2020-21 மற்றும் 2021-2022ம் ஆண்டுகளில் மத்திய அரசிடம் இருந்து சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு தொகைக்கு மாறாக கடனாக பெறப்பட்ட தொகை நீங்களாக ரூ.5,77,987 கோடியாக இருக்கும். இது 2021-2022ம் ஆண்டு மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 27.05 சதவீதமாக இருக்கும். இது 2021-22ம் ஆண்டு மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 27.05 சதவீதமாக இருக்கும். இது 15வது நதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை