2021 தேசிய ஸ்கில்ஸ் போட்டி: பதக்கங்கள் வென்ற தமிழக இளைஞர்களை பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தேசிய அளவிலான இந்தியா ஸ்கில்ஸ் 2021 திறன் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக இளைஞர்களை பாராட்டி ஊக்கத்தொகை தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (14.3.2022) தலைமைச் செயலகத்தில், ஜனவரி 2022-ல் புதுடில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான இந்தியா ஸ்கில்ஸ் 2021 திறன் போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்களை வென்ற தமிழக இளைஞர்களை பாராட்டி, ஊக்கத் தொகை வழங்கினார். தமிழ்நாட்டினை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்று நாட்டின் முதன்மை மாநிலமாக உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இளைஞர்களுக்கான  திறன் மேம்பாடு  முக்கிய  பங்கு வகிக்கும் என்பதை அறிந்து, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.  அதில் ஓர் அங்கமாக, தமிழ்நாட்டை நாட்டின் திறன் முனையமாக மாற்றிடும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் திறனை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.        தேசிய அளவில் நடைபெறும் அனைத்து மாநிலங்களுக்கான திறன் போட்டிகள் இரண்டாண்டிற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அவ்வகையில் இந்தியா ஸ்கில்ஸ் 2021-ன் இறுதிப்போட்டிகள்  2022 ஜனவரி  6 முதல் 10-ஆம் தேதி வரை புதுடில்லியில் நடைபெற்றது. தமிழ்நாட்டின் சார்பில் துறைவாரியாக பல நிலைகளில் தெரிவு செய்யப்பட்ட 36 நபர்கள் பல்வேறு திறன் போட்டிகளில் கலந்துகொண்டனர். இவர்கள் இதுவரை இல்லாத வகையில் 2 தங்கம், 8 வெள்ளி, 8 வெண்கலம் மற்றும் 5 சிறப்பு பதக்கம், என மொத்தம் 23 பதக்கங்களை வென்றுள்ளது, இதுவே முதல் முறையாகும். இந்தியா ஸ்கில்ஸ் 2021 திறன் போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, தங்கப்பதக்கம் வென்ற ஏ. அனுஸ்ரீ, சுபாசிஸ் பால் ஆகியோருக்கு தலா 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், வெள்ளிப் பதக்கம் வென்ற  எம். காளிராஜ்,  சி. கார்த்தி, எஸ். தாட்சாயினி, பி.வி. சரஸ்வதி, ஆர்.ஜெ. பிரகதீஸ்வரன், எஸ். விஷ்ணுபிரியா  ஆகியோருக்கு தலா   50,000/- ரூபாய்க்கான காசோலையும், வெண்கலப் பதக்கம் வென்ற எம்.ஜெ. அபர்ணா, பி. லோகேஷ், கே. அஜய்பிரசாத், வி. லோகேஷ், எஸ். ஜெகன், என்.ஆர். பிரகதீஷ், ஆர். தினேஷ் ஆகியோருக்கு தலா 25,000/- ரூபாய்க்கான  காசோலையும், தமிழ்நாடு  முதலமைச்சர் வழங்கி பாராட்டினார்கள்.உலகளவிலான ஸ்கில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை இலக்காக கொண்டு நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து இன்று நடப்பிலுள்ள தொழில் நுட்பங்களின் வழி திறன் பயிற்சியினை போட்டியாளர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அளித்தமையால் இத்தனை பதக்கங்கள் வென்றது சாத்தியமாயிற்று. பதக்கங்கள் வென்ற தமிழ்நாடு வீரர்கள் பலர் தெரிவு செய்யப்பட்டு ஸ்கில் ஒலிம்பிக்ஸ் எனப்படும் உலக அளவிலான திறன் போட்டிகளில் பங்குபெற உள்ளனர். இப்போட்டிகள் எதிர் வரும் அக்டோபர் மாதம் சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறவுள்ளது.இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.  கணேசன்,   தலைமைச் செயலாளர்   இறையன்பு,  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் ஆர். கிர்லோஷ் குமார், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர்    இன்னசென்ட் திவ்யா,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்