2019ம் ஆண்டு நவம்பர் மாதமே சிகிச்சை பெற்றனர்: சீன ஆய்வக விஞ்ஞானிகளுக்கு முன்கூட்டியே கொரோனா அறிகுறி: அமெரிக்க உளவுத்துறை பரபரப்பு அறிக்கை

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே, கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதமே,  சீன உகான் ஆய்வக விஞ்ஞானிகள் 3 பேர் கொரோனா அறிகுறி, காய்ச்சலுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக அமெரிக்க  உளவுத்துறை பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.கொரோனா வைரஸ் முதல் முறையாக கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்டது. அதன்பின் உலகம்  முழுவதும் இன்று வரை கடுமையாக பாதித்துக் கொண்டிருக்கிறது. இந்த கொடூர வைரஸ் எவ்வாறு உருவானது என்பது விடை தெரியாத  கேள்வியாக உள்ளது. சீனாவின் உகான் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட்டில் இருந்தே இந்த வைரஸ் கசிந்துள்ளதாக அமெரிக்கா  தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.இது தொடர்பாக, உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு சமீபத்தில் சீனாவில் சென்று ஆய்வு நடத்தி, ஆய்வகத்திலிருந்து வைரஸ்  கசிந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்றும், இது வவ்வால் போன்ற பிற உயிரினத்திடமிருந்து மனிதனுக்கு பரவியிருக்கலாம் என்றும்  கூறியது. ஆனால் இந்த அறிக்கையை உலக நாடுகள் ஏற்கவில்லை. பல விஞ்ஞானிகளும் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, கொரோனா  எப்படி உருவானது என உலக சுகாதார நிறுவனம் மீண்டும் விசாரணை நடத்த உள்ளது. இந்தநிலையில், அமெரிக்க உளவுத்துறை சில பரபரப்பான புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’  பத்திரிகையில் உளவு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், கொரோனா குறித்து அறிவிக்கும் முன்பாகவே கடந்த 2019ம் ஆண்டு  நவம்பர் மாதம் உகான் ஆய்வக விஞ்ஞானிகள் 3 பேருக்கு கொரோனா அறிகுறி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என கூறி உள்ளது. இதனால் இந்த தகவல் உகான் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ்  கசிந்தது குறித்து இன்னும் ஆழமான ஆய்வு நடத்த வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து அமெரிக்க அதிபர் பைடன் அரசு நிர்வாகம் கூறுகையில், ‘‘சீனாவில் கொரோனாவின் தோற்றம் மற்றும் அதன் ஆரம்பகட்ட  நாட்கள் பற்றி கடுமையான சந்தேகங்கள் இன்னமும் தொடர்கின்றன. இதை கண்டறியும் பணியில் உலக சுகாதார நிறுவனம் மற்றும் பிற  நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு முழுமையாக முடிந்து,  ஆதாரப்பூர்வமான தகவல்கள் கிடைக்கும் வரை நாங்கள் எதிலும் முடிவுக்கு வருவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம்’’ என்கிறது….

Related posts

நஸ்ரல்லாவுக்கு பின் தலைவர் பதவியை ஏற்க இருந்த ஹஷேம் சபேதீன் இஸ்ரேல் குண்டு வீச்சில் ஹிஸ்புல்லா மூத்த தலைவர் பலி: லெபனானில் பதற்றம்

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

போஸ்னியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு