200 யூனிட் இலவச மின்சாரம் ரூ.500க்கு சமையல் கேஸ் சிலிண்டர் தெலங்கானாவில் முதல்வர் தொடங்கி வைத்தார்

திருமலை: தேர்தல் வாக்குறுதிப்படி 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் ரூ.500க்கு சமையல் கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை தெலங்கானா முதல்வர் தொடங்கி வைத்தார். தெலங்கானாவில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று முதல்வராக ரேவந்த்ரெட்டி பதவி ஏற்றார். தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம், ரூ.500க்கு சமையல் கேஸ் திட்டங்கள் கொண்டு வரப்படும் என காங்கிரஸ் சார்பில் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடிவு செய்தது. அதன்படி நேற்று தெலங்கானா தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் ரூ.500க்கு சமையல் கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை முதல்வர் ரேவந்த்ரெட்டி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி மின்வாரிய ஊழியர்கள் 200 யூனிட்டுக்கு குறைவாக உள்ளவர்களுக்கு `ஜீரோ’ பில் உருவாக்க உள்ளனர். இதன்மூலம் கிரஹஜோதி என்ற இந்த திட்டத்தின் மூலம் தெலங்கானாவில் 83 லட்சம் குடும்பங்கள் பயனடைய உள்ளனர். இதேபோல் மாநிலம் முழுவதும் 90 லட்சம் பேர் ரேஷன் கார்டுகள் வைத்துள்ள நிலையில் அவர்கள் அனைவருக்கும் ரூ.500 விலைக்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மாதந்தோறும் கேஸ் விநியோகஸ்தர்களுக்கு அரசு மானியத்தொகை வழங்க உள்ளது.

Related posts

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி