இமாச்சலில் பெய்த கனமழையால் 200 பேர் பலி; 31 பேர் மாயம் ரூ6,563 கோடி இழப்பு: மாநில அமைச்சர் தகவல்

 

சிம்லா: இமாச்சலில் பெய்த கனமழையால் 200 பேர் பலியான நிலையில் ரூ6,563 கோடி இழப்பு ஏற்பட்டதாக மாநில அமைச்சர், ஒன்றிய அமைச்சரிடம் தெரிவித்தார். இமாச்சல பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் பெய்த பருவமழையால் 200 பேர் பலியானதாகவும், 31 பேர் மாயமானதாகவும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக 57 பேர் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தின் காரணமாகவும், 142 பேர் மழைக் காலத்தில் ஏற்பட்ட சாலை விபத்துக்களால் இறந்துள்ளனர். மழை வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் உள்கட்டமைப்புக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.6,563.58 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழையினால் 774 வீடுகளும், 7,317 பகுதியளவு வீடுகளும், 254 கடைகள் மற்றும் 2337 மாட்டு கொட்டகைகள் சேதமடைந்துள்ளன.

மொத்தம் 79 நிலச்சரிவுகள், 53 திடீர் வெள்ளச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கிட்டத்தட்ட 300 சாலைகள் பெரும் சேதமடைந்துள்ளதால் இன்னமும் போக்குவரத்துக்கு திறந்துவிடப்படவில்லை. இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டார். அவருடன் சென்ற அம்மாநில அமைச்சர் விக்ரமாதித்ய சிங் கூறுகையில், ‘இமாச்சல பிரதேசத்தில் பெய்த மழையால் 330 சாலைகள், இரண்டு முக்கிய நான்கு வழிச் சாலைகள் மூடப்பட்டுள்ளன. குலு மாவட்டத்தை மீட்டெடுக்க ரூ. 400 கோடி நிவாரண உதவி தேவைப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்த பின், முதற்கட்டமாக 400 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றார். அடுத்த 2 நாட்களில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை மாநில முதல்வர் சந்திப்பார்’ என்றார்.

Related posts

தீவிரவாதச் சம்பவங்கள் அதிகரிப்பு; 2 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் நீக்கம்: சொந்த கேடருக்கு அனுப்பிவைப்பு

பல்லாவரம், கூடுவாஞ்சேரி இடையே புறநகர் ரயில்களை நெரிசல் நேரங்களிலாவது இயக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடத்தை 3 மாதங்களில் அகற்ற ஐகோர்ட் ஆணை..!!