2005ம் ஆண்டு காவல்துறையில் கையாடல் செய்தவர் பணிநீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரரிடம் செம்மரக்கட்டைகள், நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்

குடியாத்தம் : பேரணாம்பட்டு அருகே கடந்த 2005ம் ஆண்டு காவல்துறை வைப்புத்தொகை கையாடல் செய்த வழக்கில் பணிநீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரரிடம் செம்மரக்கட்டைகள் மற்றும் நாட்டுத்துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த சரளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சசிதரன்(45), ஆயுதப்படையில் 2ம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2005ம் ஆண்டு காவல்துறை வைப்புத்தொகையை கையாடல் செய்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.இந்நிலையில் சசிதரன் வீட்டில் கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்து வருவதாக குடியாத்தம் டிஎஸ்பி அலுவலகத்துக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சசிதரன் வீட்டில் சோதனை நடத்த போலீசாருக்கு டிஎஸ்பி ராமமூர்த்தி உத்தரவிட்டார். அதன்பேரில், பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு, குடியாத்தம் சப்-டிவிஷன் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன், வேலூர் மாவட்ட திட்டமிட்ட குற்றப்பிரிவு தலைமை காவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று மதியம் சசிதரன் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர்.தொடர்ந்து விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிடப்பட்டிருக்கிறதா? என்று சோதனை செய்தனர். அப்போது, உரிய அனுமதியின்றி வைக்கோலுக்குள் நாட்டுத்துப்பாக்கி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 68 கிலோ எடை கொண்ட 4 செம்மரக்கட்டைகளும் சிக்கியது. அவைகளை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிதரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முயல், காட்டுப்பன்றி ஆகியவற்றை வேட்டையாடுவதற்காக நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து செம்மரக்கட்ைட கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….

Related posts

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

பொன்னேரியில் 40 சவரன் நகை கொள்ளை..!!

பாம்பு கடித்து பலி: குடும்பத்துக்கு இழப்பீடு தர ஐகோர்ட் ஆணை